“வாக்கு சதவீத உயர்வால் என்ன பயன்?” - தெறிக்கும் தமிழிசை நேர்காணல் | அண்ணாமலை முதல் சீமான் வரை

By நிவேதா தனிமொழி

'பாஜக - அதிமுக கூட்டணி அமைத்திருந்தால் இரு கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கலாம்' என அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார். அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்னாள் ஆளுநரும் தென்சென்னை பாஜக வேட்பாளுருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளைக் கூறினார். ஆனால், அவரின் இந்தக் கருத்துகள் தமிழக பாஜக கட்சிக்குள்ளும் பூகம்பகமாக வெடித்துள்ளது. அந்தச் சூட்டுடன் அவரிடம் நேர்காணலை நிகழ்த்தி இருக்கிறோம். இதில், கூட்டணி பிளவுக் காரணம் யார்? தலைவராக அண்ணாமலை செயல்பாடுகள் எப்படி? தனது அடுத்த நகர்வு என்ன? - இப்படி பல கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்துள்ளார். அதன் விவரம்:

இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்தது வெற்றிகரமான தோல்வியா? நீங்கள் எப்படி பார்க்கறீர்கள்?

“இந்தத் தேர்தல் வெற்றிகரமான தோல்விதான். எனினும் இதனை ’வெற்றி வெற்றி’ என நான் பார்க்கிறேன். வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதிமுகவை ’டெபாசிட்’ இழக்க செய்திருக்கிறோம். பல இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். ஆனால், எம்பி சீட் கிடைக்கவில்லையே. தேர்தல் என்பது ’வாக்கு சதவீதத்துக்கு மட்டுமில்லை’. மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகளை எந்த மேடையின் முன் வைக்கிறோம் என்பதைப் பொறுத்தது.

ஆகவே, தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிக்கு வியூகம் என்பது அவசியம். ’கூட்டணி’ என்பது சரண்டர் ஆவது போல் எண்ண வேண்டாம். கூட்டணி அமைப்பதும் ஒரு வியூகம் தான். இந்தக் கருத்தை முன்வைப்பதால் நான் பாஜகவின் நிலைபாட்டை எதிர்த்துப் பேசுகிறேன் என்பதல்ல. ஆனால், பல ஆண்டுகளாக அரசியல் தளத்தில் இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். அதேபோல் இப்போது பெற்ற வாக்கு சதவீதம் அடுத்துவரும் தேர்தலுக்கு நமக்கு கை கொடுக்குமா என்பது சந்தேகம்தான். ஆகவே, வாக்கு சதவீதத்தைக் கடந்து, அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் கிட்டத்தட்ட 35 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.”

கூட்டணி அமைப்பதில் தமிழக பாஜக சறுக்கி விட்டது என்கிறீர்களா?

“ஒவ்வொரு மாநில தலைவருக்கும் ஒரு வியூகம் இருக்கும். தமிழ்நாட்டு பாஜக தலைவர் இந்தத் தேர்தலைத் தனித்து சந்திக்கலாம் என முடிவெடுத்திருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், கள நிலவரமும் முடிவும் வேறொன்றாக உள்ளதை நான் கூறுகிறேன்.”

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை பேச்சுதான் காரணம் என்று சொல்லப்பட்டதே?

“அந்த நிகழ்வின்போது நான் ஆளுநராக இருந்தேன். எனவே, யார் பேசியது தவறு என்பது பற்றி நான் பேச முடியாது. கட்சியை வளர்க்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைக் காட்டிலும் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வாக்கு சதவீதம் அதிகரிப்பதாக சொல்கின்றனர். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 18.5 சதவீதத்திற்கு மேல் பாஜக வாக்கு சதவீதத்தைப் பெற்றது. ஆகவே, நம் தவறான வியூகத்தால் எதிரி வளர்ந்து விடக் கூடாது என்பதில் நான் கவனத்தோடு இருக்கிறேன்.

அண்ணாமலை எடுத்த முடிவுக்கு எதிராக நான் பேசுவதாக சொல்கின்றனர். ஆனால், நான் கள யதார்த்தத்தைப் பேசுகிறேன். நாம் இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டேன் என்று சந்தோஷப்படுவதா? திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டது என்று கவலைப்படுவதா? திமுக வென்றிருப்பதுதான் என் பிரதான கவலை.”

”தமிழிசை, முருகன் பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணி நன்றாகத்தான் இருந்தது. அண்ணாமலையால்தான் இந்தப் பிளவு ஏற்பட்டதாக வேலுமணி கூறினார். தலைவராக அண்ணாமலை செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?”

“அண்ணாமலைக்கு நான் ரிப்போட் கார்டு கொடுக்க முடியாது. நான் யதார்த்தமான உண்மைகளை சொல்லும்போது அண்ணாமலைக்கு எதிராக நான் செயல்படுவதுபோல் ஆகிவிடக் கூடாது. அகவே, கவனமாக என் வார்த்தைகளை எடுத்து வைக்கிறேன்.”

பாஜக ஐடி விங் பிரிவை கடுமையாக எச்சரித்து இருந்தீர்களே? என்ன காரணம்?

மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களையும் குறிப்பிட்டேன். பிற கட்சியினர் என் தோல்வி குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். ’Go back to Telegana’ என்கின்றனர். நான் எங்கு இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதே நேரம், உட்கட்சி அளவில் ஒரு தலைவரைப் புகழ்கிறேன் என்னும் பெயரில் மற்றொரு தலைவரை தவறாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி வாக்கு வாங்க முடியாது. சிலர் இரு தலைவர்களையும் ஒப்பிட்டு, அவர் கூடுதலாக வாக்குகள் வாங்கி இருக்கிறார் எனப் பேசுவது சரியல்ல.”

கட்சிக்குள் நடக்கும் இந்தப் பிரச்சினைகளை யார் சுட்டிக்காட்ட வேண்டும்?

“யார் வேண்டுமானால் சுட்டிக்காட்டலாமே. நான் இப்போது சுட்டி காட்டுகிறேன். அது எனக்கு எதிராகவும் கூட மாறலாம். ஆனால், அதனை தைரியமாகவே நான் முன்வைக்கிறேன். கூட்டணி வைப்பதால் மட்டுமே கட்சி சுருங்கி விடாது. கூட்டணி என்பதும் ஒரு வியூகம் தான். கட்சி பெருமையைப் பேசிக்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் எத்தனை நாட்களுக்கு கட்சியின் தொண்டன் இருப்பான் . தற்போது, மத்தியில் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கிறது. தமிழகத்தில் எம்பிக்கள் வெற்றி பெற்றிருந்தால் தைரியமாக அமைச்சர் பொறுப்பை வாங்கியிருக்கலாம். தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும். நல்ல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கலாம். அது கிடைக்காமல் போயிருப்பது வருத்தம்தான்.”

திமுக அதிருப்தி, அதிமுக உடைசலால் தமிழகத்தில் பாஜவுக்கு வாக்குகள் கிடைத்திருக்கிறதா? இல்லை, உண்மையில் பாஜக வளர்ந்திருக்கிறதா?

“கட்சி வளர்ந்திருந்தாலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. கூட்டணி சரியாக அமைத்திருந்தால் 35 பிரதிநிதிகள் வரை கிடைத்திருப்பார்கள்.”

தமிழிசையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

“தமிழகத்தில் தீவிரமான அரசியலை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டு இருக்கிறேன்.”

தமிழக பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா?

“தலைவராக இருந்துதான் வெற்றியைக் கொண்டுவர வேண்டும் என்பது கிடையாது. கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அனைத்து சதந்திரமும் கட்சிக்குள் இருக்கிறது. அதைவேளையில் எனக்கு தலைமை பொறுப்பு கிடைக்காது என்றும் சொல்லவில்லை.”

அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

“அண்ணாமலைக்கு நான் ரிப்போர்ட் கொடுப்பது தவறாகிவிடும். சுறுசுறுப்பான தம்பி. பல இடங்களில் கட்சிகளைக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், முன்னாள் மாநில தலைவராக எனக்கு இருக்கும் ஆசை என்னவென்றால், கட்சியின் கட்டமைப்பு அதிகரிக்க வேண்டும். பூத் கமிட்டியைப் பலப்படுத்த வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கட்சிக்கு அதிகரிக்க வேண்டும். பல இடங்களில் வளர்ச்சி நடந்திருக்கிறது. அது மற்ற இடங்களுக்கும் செல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல், நான் இருக்கும்போது குற்றவாளிகளைக் கட்சிக்குள் சேர்க்க மாட்டேன். ஆனால், தற்போது சமூக விரோதிகள் பலருக்கும் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது. கட்சியில் பல ஆண்டுகளாக தொண்டர்களாக அடிமட்டளவில் வேலை பார்ப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது என் கருத்து.”

அண்ணாமலை அணுகுமுறை எப்படி இருக்கிறது? அவரின் கேள்விகள் நாகரிகமாக இருக்கிறதா?

“நான் தற்போது இதற்கு எதைக் கூறினாலும் அது அண்ணாமலை கமென்ட் செய்யும் விதமாக மாறிவிடும்.”

கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, அண்ணாமலையின் பேச்சுதான் பிளவுக்கு காரணம் என்னும் முறையில் இந்தக் கேள்வி எழுகிறதே?

“தவறுக்கு காரணம் இவர்தான் என்று கூறுவது சரியாக இருக்காது. இனிவரும் காலங்களில் கட்சி நல்ல முறையில் வளர்ச்சி அடைய வேண்டும். கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுக்கும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.”

‘தலைமை கூறும் அஜெண்டா வழியில் தான் நான் செயல்படுகிறேன்’ என்று அண்ணாமலை கூறுகிறாரே? அது என்ன அஜெண்டா?

நாங்கள் சொல்லும் கருத்தை தலைமை ஏற்றுக் கொள்ளும். இல்லை என்றால், எங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். ’தலைமை முடிவெடுக்காமல் அண்ணாமலை பேசுகிறார்’ என சில செய்திகள் வெளியாவதில் உண்மையில்லை. குறிப்பாக, கூட்டணி பேச்சு வார்த்தையில் தலைமையின் பங்கு இருக்கும். நாங்கள் தலைவராக இருந்தபோது நாங்கள் எடுத்துச் சென்ற விதம் ஒரு மாதிரியாக இருந்தது. அதில் அண்ணாமலையின் ஸ்டைல் வேறுபடலாம். ஆனால், அவரின் அஜெண்டா குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.”

அண்ணாமலை பல நேரங்களில் தெளிவில்லாமல் பேசுவது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. அவர் பத்திரிகையாளரை நடத்தும் விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

“அவரின் பத்திரிக்கையாளர் சந்திப்புகளைப் பார்த்திருக்கிறேன். என் அணுகுமுறை வேறு. அவர் அணுகுமுறை வேறு. அது அவர் ஸ்டைல். இளைஞராக இருப்பதால் துடிப்பாக இருக்கிறார். நான் தலைவராக இருந்தபோது சில செய்தி நிறுவனங்கள் எப்படி கேள்வி கேட்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அதை எளிமையாகக் கையாள்வேன். ஆனால், அண்ணாமலை கோபமடைந்து விடுகிறார்.”

திமுக மீண்டும் மக்களால் தேர்ந்தெடுத்ததற்கு அவர்களின் ஆட்சி மற்றும் திட்டம் காரணமில்லையா?

“திமுக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர்கள் ’நல்லாட்சி’ காரணமில்லை. அவர்களின் கூட்டணி பலமாக இருந்தது. ஆனால், எங்களிடம் சரியான கூட்டணி இல்லை . திமுகவின் வெற்றி என்பது ஆட்சியால் வந்த வெற்றி இல்லை, எதிர்க்கட்சி பிளவால் கிடைத்த வெற்றி.”

நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்திருக்கிறது. 8 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

“வாக்கு சதவீதம் உயர்வதால் என்ன பயன்? நாம் தமிழர் கட்சி என்றுமே ஆட்சிக்கு வர முடியாது. சீமான் பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. சீமானிடம் பேச்சுதான் இருக்கிறதே தவிர செயல்பாடு எதுவுமில்லை.”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்