நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமீபத்திய நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணைமதிப்பெண்கள் என்ற போர்வையில்நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளிவழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின்அதிகாரக் குவிப்பின் குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில், மாநிலஅரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறோம். நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழைமாணவர்களுக்கு எதிரானவை. சமூகநீதிக்கு எதிரானவை. நீட் எனும்பிணியை அழித்தொழிக்க கரம்கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: நீட் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு தேசிய தேர்வுமுகமை கருணை மதிப்பெண்கள் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு எழுதிய 23,33,297 பேரில்எத்தனை பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறாமல் இருப்பதும் நியாயமில்லை. இதனால் இந்த ஆண்டு650 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமத்துக்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசியதேர்வு முகமையின் விளக்கம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல்வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் கூட சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட்தேர்வை ரத்து செய்து பழையபடி 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்தஆவனசெய்யும்படி புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன்: ஹரியாணாவில் ஒருமையத்தில் நீட் தேர்வு எழுதிய 8 பேர் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இதில் 6 பேர் அடுத்தடுத்த வரிசை எண்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்பதும், தவறான பதிலுக்கு 4 மதிப்பெண் குறைவதோடு கூடுதலாக ஒரு மதிப்பெண் கழிக்கப் படும் என்கிற நிலையில் 2-ம், 3-ம் இடம் பெற்றவர்கள் 719, 718 என மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. இழக்கப்பட்ட நேரத்துக்கான கருணை மதிப்பெண்கள் இது என தேசிய தேர்வு முகமை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்விவணிகமயமாவதைத் தடுக்கவும்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்தஇரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை. அவற்றையும் கடந்து, கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகள், மாணவர்களிடையே பாகுபாட்டைக் காட்டி, பலரின் வாய்ப்புகளை பறித்திருக்கிறது. இந்த அநீதியைப் போக்க நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஏழைமாணவர்களின் மருத்துவக் கனவைசிதைக்கும் முறைகேடுகள் நிறைந்தநீட் தேர்வு முறையையே நிரந்தரமாக ரத்து செய்ய முன்வர வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் திமுக 40 மக்களவை உறுப்பினர்களை வென்றுள்ளதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பலத்தைப் பயன்படுத்தி, நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்