குடும்பத்தில் இருந்து என்னை நீக்கியதற்கு நன்றி, இனி சசிகலா வின் பெயரையோ படத்தையோ பயன்படுத்த மாட்டேன் எனவும், அரசியல்ரீதியாக விமர்சனங்களைச் செய்வேன் என்றும் அம்மா அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வி.திவாகரன் தெரிவித்தார்.
சசிகலாவிடமிருந்து அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சசிகலா எனக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் குழப்பங்கள் உள்ளன. சசிகலாவை அதிமுக வின் பொதுச் செயலாளர் என்று சொல்கிறார்களா அல்லது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்று சொல்கிறார்களா என்பது புரியவில்லை.
நான் ஏற்கெனவே சசிகலாவின் படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று எனது தொண்டர்களிடம் கூறினேன். ஆனால், ஆர்வத்தின் காரணமாக படத்தை மட்டும் பயன்படுத்தினார்கள்.
இனி நாங்கள் சசிகலாவின் பெயரை, படத்தைப் பயன்படுத்த மாட்டோம். அதனால் வரப்பட்டுள்ள நோட்டீஸை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பதில் தெரிவிக்க வேண்டிய அவசியமும் எழவில்லை. நாங்கள் இனி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயரைச் சொல்லி எங்கள் அணியை வலுப்படுத்துவோம்.
நெருக்கடி இல்லை
சசிகலா அனுப்பியுள்ள நோட்டீஸ் மூலம் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. சசிகலாவை பழிவாங்க என்னை ஆயுதமாகப் பயன்படுத்த தினகரனும் வெற்றிவேலுவும் நினைத்தனர். அந்தக் கனவு பலிக்காது. இதுவரை தினகரன் சொன்ன எதுவுமே நடக்கவில்லை. குறிப்பாக ஆட்சியைக் கலைப்போம், இரட்டை இலையை மீட்போம் என்றெல்லாம் கூறினாரே தவிர அவற்றை செய்து காண்பிக்கவில்லை.
என்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு மிக்க நன்றி. மன்னார்குடி மாபியா குடும்பம் என்ற அவப்பெயர் இனிமேல் எனக்கு இருக்காது. இந்த வார்த்தைகளை எதிர்ப்பதற்கு முடியாமல் நான் தயங்கிக் கொண்டிருந்தேன்.
இனி சசிகலா குடும்பம் என்ற தகுதி எனக்கு தேவையில்லை அதை நான் வெறுக்கிறேன். நான் சசிகலாவின் தம்பி என்பதால் கடந்த 33 ஆண்டுகளாக மிகப் பெரிய சுமையை என் தலையில் சுமந்துகொண்டு இருந்தேன். என் சகோதரி சிறையில் இருக்கும்போது, நான் பொதுவெளியில் நடமாட, நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்க முடியாமல் பெருத்த அவமானங்களைச் சந்தித்தேன். அதை மடை மாற்றம் செய்து கல்விப்பணியில் என் கவனத்தைத் திருப்பினேன். இல்லையெனில் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும். என்னுடைய வாழ்நாளில் சசிகலா குடும்பம் மாபியா கும்பல் என்ற அவப்பெயரைத் தாங்கியே பாதிநாட்கள் கழிந்துவிட்டன. தற்போது அந்த நிலை மாறி விட்டது. இதற்கு கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
சசிகலா எனது சகோதரி இல்லை. முன்னாள் சகோதரி ஆகிவிட்டார். நான் இனிமேல் அவரைப் பற்றிப் பேச மாட்டேன். அதே நேரத்தில் பொதுவாழ்வில் உள்ளவர்களை, யாரை வேண்டுமானாலும் நியாயமாக தரக்குறைவு இல்லாமல் விமர்சிக்கலாம், அதனால் அரசியல்ரீதியான விமர்சனங்களைச் செய்வேன். அதையும் தேர்தல் காலங்களில் கடுமையாக செய்வேன்.
இணைந்து செயல்பட முயற்சி
அதிமுகவில் இருந்து பிரிந்து மதுரையில் ஒருவர் கட்சி நடத்தி வருகிறார். அதுபோல, தீபா ஒரு அணியை நடத்தி வருகிறார். இப்படி பிரிந்து கிடக்கின்றவர்களை இணைத்து ஒன்றாக செயல்பட முயற்சி எடுப்போம்.
சிறையிலிருந்து சசிகலாவை வெளியில் கொண்டுவர நான் எடுத்த முயற்சிகளை சிலர் முறியடித்து விட்டனர். தற்போதுகூட, என்னை இதற்காகத்தான் வெளியேற்றியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விவகாரத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவதால் காவிரி தண்ணீர் வந்து விடுமா எனக் கேட்டு தினகரன் நழுவிக் கொண்டார். அவர்களுக்கு ஒதுங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்னும் 3 மாதங்களில் மத்திய அரசால் அவருக்கு நிர்ப்பந்தம் அதிகரிக் கும்.
சமுதாயத்தில் உள்ள அவலங்களையும் அநியாயங்களையும் எதிர்த்து அம்மா அணி போராடும். அரசியலில் பண பலம், படை பலத்தை எதிர்த்துப் போராடும். அரசியலில் கலந்துவிட்ட விஷ ஜந்துகளை வெளியேற்றப் பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அணி உருவாக்கப்பட்டபோது, எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் அதில் பெரும் பங்கு உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளிடம் இருந்து 3 கட்டத்தில், அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளேன். ஒருமுறை தலைமைக் கழகத்தைக் கைப்பற்ற வந்தபோது ஜெயலலிதாவுக்கு குறி வைத்தனர். போலீஸாரை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். மகளிர் அணியினர் அங்கு யாரும் இல்லை. தனி மனுஷியாக ஜெயலலிதா வந்திருந்தார். போலீஸார் ஜெயலலிதா மீது தாக்கினர். அவர் மீது விழுந்த அடி முழுவதையும் என்னுடைய தலையை கொடுத்து வாங்கிக்கொண்டேன். அந்த நேரத்தில் ஜெயலலிதாவை என் நெஞ்சில் மறைத்தபடி காரில் ஏற்றி அழைத்துச் சென்றோம்’ என்று திவாகரன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago