உயர் நீதிமன்ற உத்தரவு நூற்றுக்கு நூறு சரி ‘ஃபார்வர்டு மெசேஜ்’ என்றாலும் நீங்கள்தான் பொறுப்பாளி: பெண் வழக்கறிஞர்கள் கருத்து

By ஆர்.பாலசரவணக்குமார்

‘ஃபார்வர்டு மெசேஜ்’ என்றாலும், சம்பந்தப்பட்டவர்தான் அதற்கும் பொறுப்பாளி என்று எஸ்.வி. சேகர் வழக்கில் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதற்கு ஆதரவாக பெண் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண் செய்தியாளர்களுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு, உயர் நீதிமன்ற பெண் நீதிபதி எஸ்.ராமதிலகம் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘‘பார்வர்டு மெசேஜ்’ என்றாலும், சம்பந்தப்பட்டவர்தான் அதற்கும் பொறுப்பாளி. சமூகத்தில் முக் கிய அந்தஸ்தில் உள்ளவர் தவறான முன் உதாரணமாக இருந்துவிட்டார். பெண்களுக்கு எதிரான கருத்துகளைக் கூற யாருக்கும் உரிமை இல்லை’’ என்று கூறிய நீதிபதி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்து பெண் வழக்கறிஞர்கள் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் ஆர்.சுதா: எழுத்து, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. அதை சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களுக்கு கேடயமாக பயன்படுத்தக்கூடாது என சமீபத்தில் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ஒரு கருத்தை ‘ஃபார்வர்டு’ செய்யும்போது அந்தக் கருத்தை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டார் என்றுதான் அர்த்தம். ‘ஃபார்வர்டு மெசேஜ்’ என்றாலும், சம்பந்தப்பட்டவர்தான் அதற்கும் பொறுப்பாளி என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது என்பது நூற்றுக்கு நூறு சரி.

இதுபோல தவறான கருத்துகளைப் பரப்ப யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு தெரிவிப்பது பெண்ணுரிமைக்கு எதிரானது. இந்தச் செயல்பாடு ஒருவரை சாதியைச் சொல்லி அழைப்பதைவிட கொடூரமானது. ஒரு கருத்தைப் பேசுவதற்கும், எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. எழுத்துப்பூர்வமான கருத்து ஆவணமாகி விடுகிறது. அதில் இருந்து யாரும் பின்வாங்க முடியாது. இந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளதே தவிர, அழிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் யாரைப் பற்றியும் கருத்துகளை பகிர்ந்துவிட்டு, பின்னர் அதை அழித்துவிட்டு, தப்பிவிடலாம் என்ற மனநிலை உள்ளது. இது தனிப்பட்ட நபருக்கு எதிரான கருத்து அல்ல. பெண்ணினத்துக்கு எதிரானது.

தற்போது செய்தியாளர்கள், நடிகைகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பல துறைகளிலும் இருக்கும் பெண்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் சமூகத்தில் எதிர்நீச்சல் போடுகின்றனர். ஆனால், அவர்களை கேலி செய்வதும், அவமதிக்கும் வகையிலான கருத்துகளைப் பகிர்வதும்தான் சமூக வலைதளங்களில் அதிகம் நடக்கின்றன. ஒரு சமூகத்தையோ, ஓர் இனத்தையோ குறிப்பாக பெண்ணினத்தைக் காயப்படுத்தும் வகையிலான செய்தி அல்லது கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது. அதன்மூலம் பொது அமைதி கெடக்கூடாது. அதை மீறினால், தகவல் தொழில்நுட்ப பிரிவுச்சட்டம் 2000 பிரிவு 66, 66 ஏ-ன்படி தண்டனைக்குரிய குற்றம். குறைந்தது 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கமுடியும்.

உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி: சமூக வலைதளங்களில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தவறாக பேசிவிட்டு பின்னர் வருத்தம் கேட்பது இயல்பான விஷயம். ஆனால், எஸ்.வி. சேகரின் பதிவு, குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் உள்நோக்கத்துடன் தெரிந்தே பரப்பப்பட்டுள்ளது. ‘அந்த மெசேஜை நான் பதிவிடவில்லை. யாரோ ஒருவர் எனக்கு அனுப்பிய மெசேஜை படித்துப் பார்க்காமல் ஃபார்வர்டு செய்துவிட்டேன்’ என்பதுதான் எஸ்.வி. சேகர் தரப்பு வாதம். ஆனால் ‘ஃபார்வர்டு மெசேஜ்’ என்றாலும், அதில் உள்ள பொருள், செய்தி, கருத்து என அனைத்தையும் அவரும் உள்வாங்கி ஏற்றுக்கொண்டுதான் மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அதில் உள்ள கருத்துக்கும் சம்பந்தப்பட்டவர்தான் பொறுப்பாளி. அதனால், சம்பந்தம் இல்லை என ஒதுங்கிவிட முடியாது.

ஒரு நடிகராக சமூகத்தில் அதிக பொறுப்பு மிக்க நபர் தெரிவிக்கும் கருத்து மக்களிடையே வேகமாக பரவிவிடும். அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தும். இந்தக் கருத்துகளை பெண் செய்தியாளர்கள் மீதான நேரடி தாக்குதலாகத்தான் பார்க்க முடிகிறது. குழந்தைகள் செய்வது தவறு. அதையே படிப்பறிவு உள்ள பெரியவர்கள் செய்தால், குற்றமாகத்தான் பார்க்க முடியும். அந்த குற்றங்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அதுவும், ‘படுக்கையைப் பகிர்ந்துதான் ஒரு பெண் உயர் பதவிக்கு வர முடியும்’ என அந்த மெசேஜ் கூறுகிறது. இதுபோன்ற எதிர்மறையான கருத்துகளால் ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதையும், இதுபோன்ற ஃபார்வர்டு மெசேஜ்கள் பெண்களின் கண்ணியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் நீதிபதி எஸ்.ராமதிலகம் தனது தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்