இந்த ஆண்டு நீட் மறு தேர்வு நடத்துக; அடுத்த ஆண்டு முதல் நிரந்தரமாக ரத்து செய்க: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட் நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற வாதங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் நாள் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 14&ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்து நாட்கள் முன்பாக கடந்த 4ஆம் தேதியே தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் அதிக அளவாக 2021ஆம் ஆண்டில் மூவரும், 2020&ஆம் ஆண்டில் இருவரும், 2023&ஆம் ஆண்டில் ஒருவரும் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தனர். ஆனால், இம்முறை 67 பேர், அதிலும் ஒரு கேள்விக்கு தவறான விடையளித்து மைனஸ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பது வியப்பையும், நீட் மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களிலிருந்து மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கு சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடையளித்தால் ஒரு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும். அதனால், முதலிடம் பிடித்தவர்கள் 720 மதிப்பெண் பெற்றால், அதற்கு அடுத்த நிலையில் வருபவர்கள், ஒரு வினாவுக்கு விடையளிக்காமல் இருந்திருந்தால் 716 மதிப்பெண்களும், தவறான விடையளித்திருந்தால் 715 மதிப்பெண்களும் மட்டும் தான் பெற முடியும்.

ஆனால், இம்முறை முழு மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் 719, 718, 717 என மதிப்பெண்களை எடுத்துள்ளனர். இந்த மதிப்பெண்களை எடுக்க சாத்தியமே இல்லை என்பதால், விடைத்தால் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்குமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.

மாணவர்களின் ஐயத்திற்கு தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம் ஐயத்தை போக்குவதற்கு மாறாக, ஐயத்தை அதிகரித்திருக்கிறது. நீட் தேர்வில் நேர இழப்பு ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் புகார்கள் வந்ததாகவும், சிலர் நீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரிவித்துள்ள தேர்வு முகமை, அந்த மாணவர்களுக்கு மட்டும் 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதேபோல், ஒரு வினாவுக்கு இரு சரியான விடைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த இரு விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்வு முகமை கூறியுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

தேர்வுகளை நடத்துவதில் ஏதேனும் குளறுபடிகள் நடந்து, அதற்காக கருணை மதிப்பெண்கள் வழங்கப் படுவதாக இருந்தால், எதற்காக கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன? எந்த அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன? யாருக்கெல்லாம் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்? என்பது குறித்த பொது அறிவிப்பை தேர்வு முகமை வெளியிட வேண்டும்.

அதுதொடர்பான மாணவர்களின் கருத்துகளை அறிந்த பிறகு தான் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையும் பின்பற்றாத தேர்வு முகமை தன்னிச்சையாக கருணை மதிப்பெண்களை வழங்கியிருக்கிறது.

நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நேர இழப்பு ஏற்பட்டது உண்மை தான். ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நேர இழப்புக்கான கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரிய வில்லை. தேர்வு முகமைக்கு மனு அனுப்பியவர்களுக்கும், நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கும் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்குவது நியாயமும் அல்ல, சமூகநீதியும் அல்ல. தேர்வு முகமை பின்பற்றிய இந்த பிழையான நடைமுறையால் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.

எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதிகாண் மதிப்பெண் 50 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 570க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் தரப்பில் கூறப்படும் செய்திகள் கவலையளிக்கின்றன. தேசிய தேர்வு முகமை செய்த தவறுக்காக அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

2024ஆம் ஆண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாகவும், சில மையங்களில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகள் மருத்துவப் படிப்பில் சேர நினைத்திருந்த மாணவர்களின் நம்பிக்கையை குலைத்திருக்கின்றன. அந்த மாணவர்களின் ஐயங்கள் அனைத்தையும் மத்திய அரசு போக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த இரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை. அவற்றையும் கடந்து, கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகள், மாணவர்களிடையே பாகுபாட்டைக் காட்டி, பலரின் வாய்ப்புகளை பறித்திருக்கிறது.

இந்த அநீதியைப் போக்க நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்