எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது.

இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணிகள் ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டன.

முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகளின் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் பணி முடிந்த பிறகு, அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டி காந்தி இர்வின் சாலை பக்கமும், பூந்தமல்லி சாலை பக்கமும் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிகவளாகம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

இந்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக, அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதேபோல, ரயில் நிலையத்தை ஒட்டி இருந்த பார்சல் அலுவலகம் இடிக்கப்பட்டுவிட்டது. இங்கு அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தளப் பணி நிறைவடைந்துள்ளது. இங்கு 2தளம் வரை கட்டிடம் எழுப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி - இர்வின் மற்றும் பூந்தமல்லி பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

பூமிக்கு அடியில் பல அடி ஆழத்தில் கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது. பூந்தமல்லி சாலை பக்கத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் வணிக இடத்துக்காக, கட்டிடம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE