செங்கல்பட்டு அருகே பாலூரில் விஜயநகர பேரரசு காலத்து சிலை கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொல்லியல், கல்வெட்டு ஆய்வாளர்கள், தமிழர் தொன்மம் வரலாற்று அமைப்பின் தலைவர் வெற்றித் தமிழன் ஆகியோர் செங்கல்பட்டு பாலாறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பாலூர் ரயில் நிலையம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகே சாலையில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த அரிகண்ட சிலையைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அச்சிலையை ஆய்வு செய்தனர்.

அச்சிலை 3.5 உயரம் கொண்டதாகவும் முழு சிலையின் பின்தலை பகுதியில் இடது பக்கமாக வளைந்த கொண்டை, கழுத்தில் ஆபரணங்கள், இடையில் சன்னவீரம் மற்றும் ஆடை ஆகியவற்றை அணிந்தபடியும் நின்ற கோலத்தில் காணப்பட்டது.

மேலும் வலது கையில் உள்ள குறு வாளால் தனது தலையை வெட்டிக் கொள்வது போலவும், இடது கையில் உள்ள குறு வாள் பூமியை நோக்கி தாங்கியபடியும் இருந்தது.

மேலும் சிலையின் இரு கால்களிலும் அணிகலன்கள் உள்ள அமைப்பை பார்க்கும்போது இது கி.பி 1500 காலகட்டத்தில் எழுச்சியடைந்த விஜயநகரப் பேரரசு கால சிலையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அக்கால சமூகத்தில் உயர்ந்தவர்கள் நோய் வாய்ப்படும் போது அல்லதுபோரில் வெற்றி பெற வேண்டி ஊர்மக்கள் முன்னிலையில் இதுபோன்றதன்னுயிர் நீக்கும் அரிகண்ட நிகழ்வுநடைபெறும்.

உயிர்க் கொடையளிக்கும் வீரனின் குடும்பத்துக்காக அந்த பகுதிக்கு உட்பட்ட சிற்றரசர்கள் விளைநிலங்களையும் ஆடு மாடுகளையும் தானமாக வழங்கி கவுவிப்பார்கள். சாலை ஓரத்தில் மண்ணுள் புதைந்துள்ள இந்த சிலையை வருவாய் துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் வெற்றித் தமிழன் கோரியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE