சென்னை: தாம்பரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனை நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக்கு அழைக்க வேண்டுமென சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் கொண்டு சென்ற ரூ. 4 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மனை எதிர்த்தும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் கேசவ விநாயகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது கேசவ விநாயகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ், “எந்த ஆதாரங்களும் இல்லாமல் இதுதொடர்பான விசாரணைக்கு மனுதாரரை அழைத்தனர். இருந்தபோதும் விடுக்கப்பட்ட சம்மனுக்கு மதிப்பளித்து புதன்கிழமை மனுதாரர் விசாரணைக்கு ஆஜரானபோது அவரிடம் பலமணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தற்போது அவருடைய மொபைல் போன், சிம் கார்டுகளையும், 4 மாதங்களுக்கு முன்பாக அவர் எங்கு சென்றார், யாருடன் பேசினார் போன்ற விவரங்களையும் கோரியுள்ளனர். பாஜக மாநில அமைப்புச் செயலாளரான அவர் தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளர் மட்டுமின்றி மற்ற மாநிலங்களின் மேற்பார்வையாளராகவும் உள்ளார்,” என்றார்.
» பஞ்சாப் - பொற்கோயில் முன்பு காலிஸ்தான் கோஷங்கள்... ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ நினைவு நாளில் அத்துமீறல்
» அண்ணாமலை தோற்றதால் மொட்டை போட்டு பஜாரில் சுற்றி வந்த பாஜக நிர்வாகி!
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மனுதாரரின் மொபைல் போனும், சிம் கார்டும் உங்களுக்கு எதற்கு தேவைப்படுகிறது? இது துன்புறுத்தலுக்கு சமமானது. அந்த மொபைல் போனை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என போலீஸாருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது காவல்துறை தரப்பில், “இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது மனுதாரர் எங்கு இருந்தார்? என்பதில் சந்தேகம் உள்ளது. விசாரணையின் போது அவர் எங்கு இருந்தார் என்பதையும் தெரிவிக்க மறுக்கிறார்.
வாட்ஸ் அப் கால் மூலமாக சிலருடன் பேசியுள்ளார். அந்த விவரங்கள் தேவைப்படுகிறது என்பதால்தான் அவருடைய மொபைல் போனையும், சிம் கார்டுகளையும் கோருகிறோம். இதனால் அவரது எந்த தனிப்பட்ட உரிமையும் பாதிக்கப்படவில்லை. விசாரணையின்போது அவரை போலீஸார் துன்புறுத்தவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மனுதாரரின் தொடர்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் மொபைல் போன், சிம் கார்டுகளை சமர்ப்பிக்கும்படி விசாரணை அதிகாரி சம்மன் பிறப்பித்துள்ளதால் அவர் வரம்பு மீறி செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது.
எனவே, மனுதாரரை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்தக் கூடாது. அதேசமயம் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. தேவைப்பட்டால் மனுதாரரை நீதிமன்ற அனுமதியுடன் தான் விசாரணைக்கு அழைக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago