“அதிமுக - பாஜக கூட்டணி இருந்திருந்தால் திமுக ஓர் இடம் கூட வென்றிருக்காது” - தமிழிசை

By செய்திப்பிரிவு

சென்னை: “மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இருந்திருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது யதார்த்தமான உண்மை” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடித்திருந்தால் நிறைய இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது உண்மைதான். யதார்த்தமான உண்மை. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், இன்றைக்கு திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது கணக்கு ரீதியாக உண்மை.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கூட்டணி என்பது ஓர் அரசியல் வியூகம். அந்த வியூகத்தை அதிமுகவினர், தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பயன்படுத்தி உள்ளனர். எனவே, இது ஒரு கணக்குதான். இந்த யதார்த்தமான உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்: என்றார். | விரிவாக வாசிக்க > “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு அண்ணாமலைதான் காரணம்” - எஸ்.பி.வேலுமணி

அப்போது 2026-ல் கூட்டணி உருவாகும் என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அதை நாங்கள் யாருமே எங்களுடைய கட்சியில் பதில் கூற முடியாது. கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பதை எங்களது அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். 2024-ல் தேர்தல் முடிந்து இன்னும் பதவியே ஏற்கவில்லை. 2026-ஐ பற்றி இப்போது என்ன கவலை. கூட்டணி இருந்திருந்தால், அதிகமான இடங்கள் கிடைத்திருக்கும். அதிமுக - பாஜக கூட்டணி இருந்திருந்தால், திமுகவுக்கு ஓர் இடத்தில்கூட இல்லாமல் போயிருக்கும் என்பதை என்னால் தெளிவாக கூற முடியும்” என்றார்.

அப்போது, அவரிடம் இதே நிலை நீடித்தால், 2026-ல் இதே முடிவுகள் தான் வருவதற்கான சூழல் இருக்கும் அல்லவா என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர், “2026 கூட்டணி குறித்து நான் பேசவே இல்லை. எங்களுடைய உழைப்பைப் பற்றிதான் நான் பேசுகிறேன்” என்றார். மேலும், அண்ணாமலை அதிமுகவுடன் 2026-ல் கூட்டணி இல்லை என்று கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அது அண்ணாமலையின் கருத்து அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை, 2026-க்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது. எனவே, கூட்டணி குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது.

தேர்தலில் கூட்டணி என்பது ஒரு வியூகம். அந்த வியூகத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. அதிமுகவைச் சேர்ந்தவர்களே இன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இது யதார்த்தமான உண்மைதான். திமுகவினர் அவர்களது ஆட்சியினால் வெற்றி பெறவில்லை. இங்குள்ள வாக்குகள் பிரிந்ததால், அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 7 சதவீத வாக்குகளை அவர்கள் இழந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE