“அதிமுக ஒன்றிணைய ஜூன் 10-ல் எம்ஜிஆர், ஜெ. சமாதிகளில் பிரார்த்தனை செய்வேன்” - கு.ப.கிருஷ்ணன்

By அ.சாதிக் பாட்சா


திருச்சி: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்குச் சென்று அதிமுக ஒன்றிணைய வழிகாட்டுமாறு ஜூன் 10-ம் தேதியன்று பிரார்த்தனை செய்ய உள்ளதாக திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக பொன் விழா கண்ட கட்டுப்பாடான இயக்கம். இந்த இயக்கம் 2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது வருத்தமாக உள்ளது. ஒற்றுமையுடன் நாம் தேர்தலை சந்தித்தால் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும். அதற்கு பிரிந்து கிடக்கும் நம் கட்சியின் இணைப்பு அவசியம். இந்த இணைப்பு மேல் மட்ட அளவில் இல்லாமல் கீழ் மட்ட தொண்டர்கள் அளவில் இருக்க வேண்டும்.

1975-ல் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது எம்ஜிஆர் சிக்கல் தீர்ப்பு குழு ஒன்றை அரங்கநாயகம் தலைமையில் அமைத்து சிக்கலைத் தீர்த்து கட்சியை ஒன்றுபடுத்தினார். இப்போதும் அதேபோன்று ஒரு குழு அமைத்து தீர்வு காண வேண்டிய சூழல் உள்ளது. எங்கள் கட்சியின் கொள்கையை எம்ஜிஆர் வகுத்தார். கட்டுப்பாடுகளை ஜெயலலிதா வகுத்தார். அதன்படிதான் அதிமுக செயல்பட வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா, ‘அவர்களுடன் கூட்டணி அமைத்து தவறு செய்துவிட்டேன். என் வாழ்நாளில் இனி அந்தத் தவறைச் செய்யமாட்டேன்’ எனச் சொன்னார். அவர் சொன்னதைத்தான் அதிமுக ஏற்று செயல்பட வேண்டும். அவர் சொல்லிவிட்டுச் சென்ற வழியில்தான் அதிமுக செல்ல வேண்டும். அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல. ஏழை, எளியவர்களால் உருவாகி எழுச்சி பெற்ற இயக்கம். கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்கள் யாராயினும், அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார். கட்சியை வளர்த்தவர்களுக்குத் தான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இயக்கத்தை ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவையே எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார். அப்படி போட்டியிட வேண்டாம் என அவரிடம் கூறியும் கேட்கவில்லை. தொண்டர்கள் உரிமையை மீட்பதையும் நழுவ விட்டுவிட்டார். போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என கூறியும் அவர் கேட்கவில்லை.

ஜூன் 10-ம் தேதி (திங்கட்கிழமை) மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதியில் மண்டியிட்டு ‘நீங்கள் உருவாக்கிய இந்த இயக்கம் இந்த தேர்தலில் தடம் புரண்டு விட்டது. மீண்டும் அதிமுக ஒன்றுபட்டு ஒரே சக்தியாக திரண்டு வெற்றி பெற எங்களுக்கு வல்லமையை தர வேண்டும், வழிகாட்ட வேண்டும்’ என பிரார்த்திக்க உள்ளேன். அந்தத் தலைவர்கள் நல்ல வழி காட்டுவார்கள் எனும் நம்பிக்கை உள்ளது.

எம்ஜிஆர் அமைத்தது போல் குழு அமைத்து கிளை மட்ட அளவில் சென்று பேச்சுவார்த்தை நடத்துங்கள். பிரச்சினை இருந்தால் அதை சரி செய்யுங்கள். கட்சி ஒன்றுபடும். தொண்டர்கள் இல்லாமல் தலைவர்கள் இல்லை. அதனால் தொண்டர்கள் மட்டத்தில் இணைப்பை ஆரம்பிக்க வேண்டும். சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை தவிர இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார்? டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து பேச முடியும்?” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE