“விருதுநகர் முடிவுகள் குறித்து தேமுதிக புகார் அளித்தால் ஆணைய உத்தரவுப்படி நடவடிக்கை” - சத்யபிரத சாஹு

By கி.கணேஷ்

சென்னை: “தேர்தல் நடைமுறை முடிந்த பின் தேர்தல் மனுக்கள் குறித்து உயர்நீதிமன்றம் தான் உத்தரவிட வேணடும். விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பாக தேமுதிகவிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் தேர்தல் ஆணைய உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி முடிவுற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், விருதுநகரில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தேமுதிக புகார் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: “அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களாக உள்ளன. தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், அங்கிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, அருகில் உள்ள ஸ்டிராங் அறைகளில் வைக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், தேர்தல் மனுக்கள் வழங்க 45 நாட்கள் அவகாசம் உள்ளது. அதற்குள் அரசியல் கட்சிகள் ஏதேனும் மனுவை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அந்த தொகுதிக்கான இயந்திரம் தனியாக வைக்கப்படும். இதுவரைக்கும் தேர்தல் தொடர்பான எந்தப் புகாரும் வரவில்லை. ஆனால், தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டால், தேர்தல் மனுவாக உயர் நீதிமன்றத்தில் மட்டுமே புகார் அளிக்க முடியும்.

விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேமுதிகவில் இருந்து எந்த புகாரும் இதுவரை வரவில்லை. வந்தால், அதற்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தேர்தல் மனு என்பது உயர் நீதிமன்றத்தின் மூலம் தான் தீர்க்கப்படும். வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு கணக்கு என்பது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், உரிய ஆவணங்கள் அடிப்படையில் திரும்ப தரப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6- வரை நடைமுறையில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், வேறு எந்த உத்தரவும் வராததால், விதிகள் விலக்கிக் கொள்ளப்படும். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 6 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்." என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE