“சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சி டெபாசிட் இழக்கும்” - புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இனியாவது தங்களை திருத்திக்கொள்ளாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணி புதுச்சேரியில் டெபாசிட் இழக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா தெரிவித்தார்.

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 6) எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இண்டியா கூட்டணியால் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டுள்ளது. இனி நாட்டில் ஜனநாயகம் தழைக்கும். எதிர்க்கட்சியால் இந்தியா இனி சரியாக செயல்படும். புதுச்சேரியில் ஆளுங்கட்சி இனியாவது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் இருந்து விலகிப் போயுள்ளனர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதை ஆளுங்கட்சி நினைத்துப் பார்க்க வேண்டும். 22 எம்எல்ஏ-க்கள், 3 நியமன எம்எல்ஏ-க்கள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இருந்தும் பாஜக கூட்டணியினர் தோற்றுள்ளனர்.

புதுச்சேரி காவல்துறை மிகவும் இறங்கி செயல்பட்டும் அவர்களால் வெல்ல முடியவில்லை. புதுச்சேரி மக்கள் தேர்வு செய்த எம்எல்ஏ-க்கள், மக்கள் பிரதிநிதியாக செயல்படாமல் உரிமையாளராக மாறினர். மின்துறை விற்பனை, துறைமுகம் மோசமான நிலை, ரேஷன் கடை மூடல் ஆகியவை அரசின் மெத்தன செயல்பாடுகளுக்கு உதாரணம். அதனால், ஆளும் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிரான வாக்குகளை மக்கள் அளித்தனர்.

புதுச்சேரி மக்கள் தாங்கள் அடைந்த பாதிப்புகளுக்கு வாக்குப் பதிவில் பதில் தந்துள்ளனர். பாஜக எம்எல்ஏ, என்.ஆர்.காங்கிரஸ், முதல்வர் தொகுதியில் கூட அவர்களால் வாக்குகளைப் பெற முடியாத அளவுக்கு நம்பிக்கை இழந்துள்ளது தெளிவாகிறது. இனியும் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணி டெபாசிட் இழக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE