விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம், தென்னை விவசாயிகள் சங்கம், விவசாய கூட்டுறவு சங்கம் என பல்வேறு விவசாய அமைப்புகள் மூலம் அரசு செய்ய முடியாத பல்வேறு சாதனைகளை விவசாயிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், குமரி மாவட்ட விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது பூமி பாதுகாப்பு சங்கம்.
விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையின்மை, பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல், பருவநிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், விளைவித்த விளைபொருட்கள் திருடு போய் விட, கொதித்தெழுந்த விவசாயிகள் உருவாக்கியது தான் பூமி பாதுகாப்பு சங்கம்.
விளை பொருட்கள்
இது குறித்து குமரி மாவட்ட பூமி பாதுகாப்பு சங்கத் தலைவர் டாக்டர் பத்மதாஸ் கூறும்போது, “சுதந்திரம் பெற்றதும் வெள்ளையர்களிடம் இருந்து நாட்டை காப்பாத்திட்டோம். ஆனால், கொள்ளையர்களிடம் இருந்து குமரி மாவட்ட விவசாய விளைபொருட்களை காப்பாற்ற முடியல. தென்னையில் தேங்காய், இளநீரையும், வாழையில் வாழை குலையையும் பறிகொடுத்து விட்டு இடிஞ்சு போயிட்டாங்க குமரி மாவட்ட விவசாயிகள்.
இது போதாத குறையாக மலை பகுதிகளை ஒட்டியுள்ள தோட்டங்களில் கால்நடைகளும், காட்டு விலங்குகளும் புகுந்து அதுங்க பங்குக்கு மகசூலை அழிக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும், திருடர்கள் தொல்லை தான் ரொம்ப கொடூரமா இருந்துச்சு.
இப்ப மாதிரி அப்ப வீட்டுக்கு, வீடு தங்கம், வெள்ளின்னு இருக்காது. ஆனால், ஊருக்கு, ஊரு செழிப்பா வெள்ளாமை நடந்துச்சு. அதனால திருடங்களோட ஒரே குறிக்கோள் விளைபொருட்களை திருடி சந்தையில் விற்பது தான்.
திருட்டை தடுக்க உதயம்
இதையெல்லாம் பார்த்து ஆதங்கப்பட்ட ‘ஈத்தாமொழி’ பகுதி விவசாயிகள் முதன்முதலில் கடந்த 1953-ம் ஆண்டு ஈத்தாமொழி பூமி பாதுகாப்பு சங்கத்தை தொடங்கினார்கள். அந்த விதை தான் இன்னிக்கு வளர்ந்து ஆலமரமாக நிக்குது. இப்ப கன்னியாகுமரி மாவட்டத்தில், 20-க்கும் மேற்பட்ட பூமி பாதுகாப்பு சங்கங்கள் உள்ளன.
எங்க சங்கத்தோட முக்கிய வேலையே விவசாயத்தையும், விளைபொருட் களையும் பாதுகாப்பது தான். விளை பொருட்கள் திருடு போகாமல் இருக்க ஒவ்வொரு சங்கத்திலும், 5 முதல் 50 காவலாளிகள் வரை வேலைக்கு வச்சுருக்கோம்.
காக்கி உடையில் காவலுக்கு நிற்கும் இவங்க சங்க கட்டுப்பாட்டில் வரும் பல்வேறு பகுதிகளுக்கும் இரவு, பகல் பாராமல் ரோந்து போய் கண்காணிப்பார்கள்.
இதனால், எங்க மாவட்டத்தில் ஆடு, கோழின்னு கால்நடை திருட்டு, மோட்டார் ஒயர் திருட்டு, விவசாய விளைபொருள்கள் திருட்டுன்னு எந்த குற்றமும் இப்ப இல்ல. குமரி மாவட்டத்தில் எந்த காவல் நிலையங்களிலும் விவசாயம் சம்பந்தமான வழக்குப் பதிவே கிடையாது.
கூலியாக விளை பொருள்
இதற்காக தென்னை விவசாயமாக இருந்தால் ஏக்கருக்கு 20 தேங்காயும், வாழையில் குலைக்கு 5 ரூபாயும், நெல் ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் (ஒரு பருவத்திற்கு), மரவள்ளி கிழங்கு க்கு ஏக்கருக்கு ரூ.500 ரூபாயும் விவசாயிகளி டம் இருந்து கட்டணமாக வசூலிக்கிறோம்.
வாழை, மரவள்ளி போன்ற பயிர்களை ஆடு தின்றால் கூட நஷ்ட ஈடு கொடுக்கிறோம். விளைபொருள்களை திருடர்கள் திருடி விட்டால், உடனே அதன் மதிப்பிற்குரிய தொகையை சங்கத்தின் மூலம் கொடுத்திடுவோம். அந்த பணத்தை காவலாளிகளின் சம்பளத்தில் இருந்து புடிச்சுக்குவோம். அப்ப தான் அவர்கள் பொறுப்புணர்வோட வேலை பார்ப்பாங்க. திருடர்கள் சிக்கும்போது இழப்பீடு தொகையை அவர்களிடம் வசூலிச்சு காவலாளிகளுக்கு கொடுத்திடுவோம்.
பிரச்சினைக்கு தீர்வு
இது மட்டுமில்லாமல் விவசாயிகளின் எல்லை பிரச்சினையில் இரு தரப்பினரையும் கூப்பிட்டு பேசி சமரசம் செய்வதில் தொடங்கி, எல்லா விவசாய பிரச்சினைகளுக்கும் தோள் கொடுக்குறோம். பாசன நீர் விவகாரம் தொடங்கி, குமரி மாவட்ட விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களுக்கும் போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்” என்றார்.
வெள்ளமோடி பூமி பாதுகாப்பு சங்கத்தில் 630 உறுப்பினர்கள் உள்ளனர். இது குறித்துசங்க உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “முன்பு உழுதவனுக்கு உழக்கு கூட மிஞ்சாத அளவுக்கு திருட்டு நடந்தது. அதையெல்லாம் பார்த்துட்டு, 1972- ல் எங்க வெள்ளமோடி பகுதியில் பூமி பாதுகாப்பு சங்கத்தை தொடங்கினோம்.
எங்க சங்கத்தைச் சேர்ந்த பகுதி விவசாயிகளின் பிரதான சாகுபடி தென்னை தான். ஆனால், இன்று தென்னை ஏறக் கூட போதிய வேலையாட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் பயிற்சியை கொடுத்திட்டுருக்கோம்.
சங்க உறுப்பினர்கள் விவசாய விளைபொருள்களின் மூலம் கொடுக்கும் வருவாயின் மூலம் பத்து காவலர்களை நியமிச்சுருக்கோம். இவங்க இரவு நேரத்தில் விளைபொருள்கள் திருடு போகாமல் பாதுகாப்பு கொடுப்பாங்க. சங்க வருவாய் மூலம் மருந்து தெளிப்பான், கல்யாண வீடுகளுக்கு வாடகைக்கு விட இருக்கைகள் வாங்கி போட்டுருக்கோம்.
விவசாயிகளின் இல்ல விசேஷத்துக்கு அதை குறைவான வாடகைக்கும் கொடுக்கிறோம். சங்கம் சார்பில் திருமண மண்டபம் கட்டியிருக்கோம்” என்றார். அரசை நம்பி பொழுதை கழிக்காமல் விவசாயிகளே ஒன்று கூடி இழுத்துக் கொண்டிருக்கும் இந்த ரதம் இப்போது போல் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வாழ்த்திவிட்டு வந்தோம்.
மரம் ஏற பயிற்சி அளிக்கும் பூமி பாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மதாஸ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago