“ஆர்ப்பாட்ட கொண்டாட்டங்கள் தேவையில்லை” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: “மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள்,” என்று திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “2022-ம் ஆண்டு விருதுநகரிலே நடைபெற்ற முப்பெரும் விழாவிலே நான் உரையாற்றும்போது, ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தேன். அது முழக்கமாக மட்டும் இருந்து விடக்கூடாது, முழுமையான வெற்றியாக விளைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை பூத் வாரியாக மேற்கொண்டது திமுக. ஒவ்வொரு நாளும் கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தேர்தல் தயாரிப்புப் பணிகளின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தேன். நானும் ஓய்வெடுக்கவில்லை. திமுக தொண்டர்களாம் உங்களையும் ஓய்வெடுக்கவிடவில்லை.

2019-ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினர் எப்படி 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து நின்றார்களோ, அதுபோலவே இந்த 2024 மக்களவைத் தேர்தல் களத்திலும் பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்கும் லட்சிய நோக்கத்துடன் ஒரே அணியாக ஒருங்கிணைந்து நின்றனர். நமது நோக்கத்தை அறிந்து கூடுதலான ஆதரவை வழங்கிய இயக்கங்களும் தோள் கொடுத்து நின்றன. இண்டியா கூட்டணியின் நம்பிக்கை மிக்க களமாகத் தமிழகம் அமைந்தது.

மதவாதத்தையும் வெறுப்பரசியலையும் விதைக்க நினைப்பவர்கள் தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி விடவேண்டும் எனத் திட்டமிட்டார்கள். வன்ம விதைகளைத் தூவினார்கள். வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்கப் பார்த்தார்கள். நாட்டின் பிரதமர் 8 முறை தமிழகத்துக்கு வந்தார். திமுக மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். தோழமைக் கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் வழியிலேயே அவரது கட்சியினரும் செயல்பட்டனர்.

மற்றொருபுறம், இந்த மதவாத சக்திகளுக்கு அடிமைச் சேவகம் செய்த அதிமுக தனித்து நிற்பதாகக் கூறி மறைமுகக் கூட்டணியாகச் செயல்பட்டது. இந்த இரண்டு சக்திகளும் தமிழகத்துக்கு எந்தளவு ஆபத்தானவை, எந்த அளவுக்குக் கேடானவை என்பதைக் கொள்கைத் தெளிவுடன் எடுத்துரைப்பது மட்டுமே தேர்தல் களத்தில் எனது பரப்புரை வியூகமாக அமைந்தது.

திமுக வெறுப்புப் பிரச்சாரம் செய்யவில்லை. பொறுப்பான முறையிலே தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது. தமிழக மேடைகளில் தமிழைப் போற்றுவது போலப் பேசும் பிரதமர் உள்ளிட்ட மத்திய ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் எந்தளவுக்கு வஞ்சித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தோம்.

கடந்த மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் எத்தனையெத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, எத்தனை கோடி மக்கள் அதனால் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச்சொன்னோம். இண்டியா கூட்டணியால்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும், ஜனநாயகத்தை மீட்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினோம். திமுகவின் தேர்தல் அறிக்கையும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையும் தோழமைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் நலன் காக்கும் வகையில் இருப்பதை விளக்கினோம்.

பன்முகத்தன்மை கொண்ட, மதநல்லிணக்கத்துடனான சமூகநீதி இந்தியாவைப் பாதுகாத்திட இண்டியா கூட்டணியால்தான் முடியும் என்பதைக் கொள்கை வழியில் எடுத்துரைத்தோம். எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டிய அவசியத்தை தோழமைக் கட்சியினரும் எடுத்துச் சொன்னார்கள்.நாம் மக்களை நேரடியாகச் சந்தித்தோம்.

மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அவர்களைச் சரியாகச் சென்று சேர்ந்திருப்பதை உறுதி செய்தோம். நம்மிடம் மேலும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். அவர்களின் கோரிக்கைகளை, கேள்விகளைச் செவிமடுத்தோம். அதைவிட முக்கியமாக, திமுக கூட்டணி மீதுதான் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் களத்தில் கண்டோம். அவர்களின் நம்பிக்கைதான் இன்று முழுமையான வெற்றியாக விளைந்திருக்கிறது.

40 தொகுதிகளில் ஏறத்தாழ பாதி அளவு தொகுதிகளில்தான் திமுக போட்டியிட்டது. மீதமிருந்த தொகுதிகள் தோழமைக் கட்சிகளின் வெற்றிவாய்ப்பை உறுதிசெய்யும் வண்ணம் பகிர்ந்தளிக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளும் நமது தொகுதிகள்தான் என்ற தோழமை உணர்வுடன் திமுக தொண்டர்கள் தேர்தல் பணிகளை நிறைவேற்றினர். திமுக போட்டியிட்ட தொகுதிகளில் தோழமைக் கட்சியினர் துணைநின்று பணியாற்றினர். இத்தகைய ஒருங்கிணைப்புதான் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

இதற்குக் காரணமான, தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்ப்பு அமையாத நிலையிலும், இந்தியாவைக் காத்திட இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன் முழு மூச்சாய்ச் செயலாற்றிய அரசியல் இயக்கத்தினர், அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் இதயப்பூர்வ நன்றியை உரித்தாக்குகிறேன். திமுக தலைமையிலான அணி மீது முழுமையான நம்பிக்கை வைத்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் பயன்மிகு திட்டங்களுக்கு நற்சான்றளிக்கும் வகையில் நாற்பது தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை அள்ளித் தந்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு கோடானுகோடி நன்றி.

மத்திய ஆளுங்கட்சியின் அதிகார பலம், அடக்குமுறைத்தனம், அவதூறு பரப்புரைகள் இவற்றைத் தகர்த்தெறிந்து நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரே அணி முழுமையான வெற்றி பெற்றது என்பது ஒரு சில மாநிலங்களில்தான். அதில் இண்டியா கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைத்திருப்பது தமிழகம் - புதுச்சேரியில் மட்டும்தான் என்பது திமுக தொண்டர்களின் ஓயாத உழைப்புக்கும், நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குமான சான்று.

மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள். அவர்களின் குரலாக மக்களவையில் ஒலிப்போம் என்ற உறுதியினை அளியுங்கள். தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்றப் பாடுபடுவதும், மாநிலத்தின் நலனைக் காக்கும் செயல்பாடுகளுமே உண்மையான வெற்றிக் கொண்டாட்டமாகும்.

நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பாஜகவின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இண்டியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத்தில் சரிக்குச் சரியாக இண்டியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம்பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.

சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது.

தமிழகத்திலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்துக்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும்,” என்று முதல்வர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்