5,72,155... தமிழக அளவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற சசிகாந்த் செந்தில் @ திருவள்ளூர்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருவள்ளூர் (தனி) தொகுதியில், சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்), கு.நல்லதம்பி (தேமுதிக), பொன்.வி.பால கணபதி (பாஜக), மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர் கட்சி), து.தமிழ்மதி (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்ட14 பேர் போட்டியிட்டனர். இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் இருந்து வந்தார். முடிவில், 7,96,956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவர், பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வெற்றியை பெற்ற சசிகாந்த் செந்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு வெளியே வந்த போது, அவரை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி தொண்டர்கள் தோளில், சுமந்து, இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

எதிர்த்து போட்டியிட்ட 13 பேரும் டெபாசிட் இழப்பு: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில், சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்), கு.நல்லதம்பி (தேமுதிக), பொன்.வி.பாலகணபதி(பாஜக), மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர் கட்சி), து.தமிழ்மதி (பகுஜன்சமாஜ் கட்சி உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 6 சுயேச்சை வேட்பாளர்கள் என, 14 பேர் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 14,30,738 (68.59 சதவீதம்) வாக்குகள் பதிவாகின. இதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரில், பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி 2,24,801 வாக்குகள் பெற்று 2-ம் இடமும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, 2,23,904 வாக்குகள் பெற்று 3-ம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஜெகதீஷ்சந்தர் 1,20,838 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பெற்றனர்.

2-ம் இடம் பிடித்த பாஜக வேட்பாளர் உட்பட சசிகாந்த் செந்திலை எதிர்த்துப் போட்டியிட்ட 13 பேரும், பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெறாததால், டெபாசிட் தொகையை இழந்தனர்.

யார் இந்த சசிகாந்த்? - சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். இது தவிர பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2019 செப்டம்பரில் தனது பணியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், ‘தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்’ என்ற காரணத்தை முன்வைத்திருந்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் களப்பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார் சசிகாந்த் செந்தில். கட்சியின் கட்டளையை ஏற்று கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான பணியை கையில் எடுத்தார். அதை திறம்பட செய்து முடிக்கவும் செய்தார்.

மேலும் கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம், ஊழல் விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரம் என பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் தனது குரலை சமூக வலைதளங்களில் அழுத்தமாக பதிவு செய்தார். அவை அனைத்துமே பரவலாக கவனம் பெற்றன. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராகவும் சசிகாந்த் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE