கோவை மக்களவை தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய திமுக!

By டி.ஜி.ரகுபதி 


கோவை: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோவை மக்களவைத் தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை பஞ்சாலைகள், பெரிய மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். எனவே, தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் தொழில் துறையினரின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

கோவையில் இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறையும், கம்யூனிஸ்ட்கள் 7 முறையும், திமுக, பாஜக தலா இரு முறையும், அதிமுக ஒருமுறையும் வென்றுள்ளன. பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பெரும்பாலும் கோவைதொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிடும்.

இதில் மாற்றமாக, 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக நேரடியாக களமிறங்கின. 2019-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் கோவையில் திமுக நேரடியாக களமிறங்கியது. திமுக சார்பில் கணபதி ப.ராஜ்குமார் போட்டியிட்டார்.

அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் 11 பேர், சுயேச்சைகள் 26 பேர் என மொத்தம் 37 பேர்களமிறங்கினர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியின் காரணமாக, நட்சத்திர அந்தஸ்து பெற்றகோவை தொகுதியின் முடிவு மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கைமுடிவில், அதிக வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் வெற்றிபெற்றார்.இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை தொகுதியை திமுககைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து திமுக முன்னணி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கடந்த 1996-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், கோவையில் திமுகவின்மு.ராமநாதன் வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர், கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதில்லை. 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை கோவையில் திமுகவே நேரடியாக களமிறங்கியது. இதனால் திமுகவினர் உற்சாகத்துடன் தீவிர களப்பணியாற்றினோம். அதற்கேற்றார் போல், திமுக தலைமையும் அமைச்சர் டிஆர்பி ராஜாவை கோவை தொகுதிக்கு பொறுப்பாளராக்கியது.

அவரும் கோவையில் முகாமிட்டு பிரச்சாரம் செய்தார். பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கட்சியினருடன் இணைந்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

மத்திய பாஜக ஆட்சியினால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், குறிப்பாக ஜிஎஸ்டி போன்ற வரிகளால் தொழில்துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், ‘இண்டியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செய்யப்படும் திட்டங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்தோம். அதன் விளைவாக 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவை தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது’’என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE