இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று (புதன்கிழமை) காலை டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதனை ஒட்டி தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார். முன்னதாக நேற்று (ஜூன் 4) நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பாஜக தனித்து 240 இடங்களிலும் என்டிஏ கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும், இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பல தொகுதிகளை கைப்பற்றியிருந்தாலும் உத்தரப் பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்ட நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, நிதிஷ்குமார், சந்திரபாபு நாடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின. இதையொட்டி, ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றன.

இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE