28-ல் அதிமுக, 11-ல் பாஜகவுக்கு 2-வது இடம்: கூட்டணி அமைத்திருந்தால் 17 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 28 தொகுதிகளில் அதிமுகவும், 11 தொகுதிகளில் பாஜகவும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், தற்போது பெற்ற வாக்குகள் அடிப்படையில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கக் கூடும் என தெரிகிறது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் நேற்று எண்ணப்பட்டன. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

முன்னதாக இந்த தேர்தலில், திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முனை போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உறுதி என்றும், 17 தொகுதிகளில் 2-ம் இடத்துக்கான வாய்ப்புள்ளது என்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். அதிமுகவோ, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றது.

ஆனால், தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான நிலையில், 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்ற, 2-ம் இடத்தை அதிமுக 28 தொகுதிகளையும், பாஜக 11 தொகுதிகளையும் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை பொறுத்தவரை, 22 தொகுதிகளில் பாஜகவும், 6 தொகுதிகளில் நாம் தமிழர்கட்சியும், 11 தொகுதிகளில் அதிமுகவும் இடம்பிடித்தன.

நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ள 6 தொகுதிகளில் 5-ல் பாஜக கூட்டணி கட்சிகளும், கன்னியாகுமரியில் அதிமுகவும் 4-வது இடத்தை பிடித்துள்ளன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. அந்த தேர்தலில் ஒரே ஒரு இடம் அதிமுகவுக்கு மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த தேர்தலுக்கு முன்னதாகவே, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி தேமுதிகவையும், எஸ்டிபிஐ கட்சியையும் தன்னுடன் சேர்த்தது. இதனால், பாஜகவுடன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்தனர். அவர்களுடன் தொடர்ந்து குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவும் சேர்ந்தது. இதனால், மூன்று கூட்டணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.

இதில் அதிமுக, பாஜக பிளவு திமுகவின் வெற்றிக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஒருவேளை இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால், 17 தொகுதிகளில் திமுகவை வீழ்த்தியிருக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE