மதுரை, தேனி, ராமநாதபுரம் தொகுதிகளில் 2-ம் இடத்தை பிடித்த பாஜக கூட்டணி: 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக

By என். சன்னாசி

மதுரை: தென் மாவட்டங்களில் தங்களது தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க, பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு நழுவினாலும், அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

அதேபோல், மதுரை தொகுதியில் பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் அதிமுக வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடம் பிடித்துள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில், 2019மக்களவைத் தேர்தலை பாஜகவுடன் சேர்ந்து அதிமுக சந்தித்தது. ஆனால், தமிழகத்தில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பின்னர், ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ‘அதிமுக தொண்டர்கள் மீட்பு இயக்கம்’ என்றஅமைப்பை உருவாக்கி, அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டு வருகிறது. மறுபுறம், டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கி செயல்படுகிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை விட்டுப் பிரிந்த அதிமுக,தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடன் சேர்ந்து களம் கண்டது. அதேநேரம், பாஜக கூட்டணியில் இணைந்து ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் தேர்தலை சந்தித்தனர். தனக்குள்ள தொண்டர் பலத்தை நிரூபிக்கும் நோக்கில், ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் களமிறங்கினார்.

திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி மீண்டும் வெற்றிபெற்றாலும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை பின்னுக்குத் தள்ளி ஓபிஎஸ் 2-வது இடத்தைப்பிடித்துள்ளார். இதேபோல, டிடிவி.தினகரன் பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளை பெற்று, தேனியில் அவரும், திருச்சியில் செந்தில்குமார் என்பவரும் போட்டியிட்டனர். ஏற்கெனவே எம்.பி.யாகஇருந்ததால் தேனியில் எளிதில் வெற்றி பெறலாம் எனத் திட்டமிட்டிருந்தார் டிடிவி.தினகரன்.

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதிலும், அவருக்கு வெற்றிவாய்ப்பு நழுவியது. இருப்பினும், இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை பின்னுக்குத் தள்ளி, 2-வது இடத்தை பிடித்துள்ளார்.மதுரை தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன், அதிமுக வேட்பாளர் சரவணனை முந்தி 2-வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது என பாஜக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தரப்பினர் கூறுகையில், ‘தேனி, ராமநாதபுரம், மதுரைதொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளோம். இதன்மூலம் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் தேர்தலை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE