ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி: 5-வது இடத்தை நோட்டா பெற்றது

By செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். 5-வது இடத்தை நோட்டா பெற்றுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி), மதுரவாயல், அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கும். இதில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை: 23,82,119.

ஏப். 19-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள்: மொத்தம்: 14,35,243. திமுக, அதிமுக, தமாகா, நாம் தமிழர் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

31-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,49,423, அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,68,432, தமாகா வேட்பாளர் வேணுகோபால் 2,07,366, நாம் தமிழர் வேட்பாளர் ரவிச்சந்திரன் 1,38,721 வாக்குகள் பெற்றுள்ளனர். நோட்டாவில் 26,058 வாக்குகள் பதிவாகின.

முன்னதாக குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்தால் அனுமதி பெற்ற தனது காருடன் வந்திருந்தார். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்தனர். வாக்கு எண்ணும் மையத்துக்குள் காருக்கான அனுமதி சீட்டு வைத்திருந்த போதும் எதற்காக அனுமதிக்கவில்லை என கேட்டு அவர் நீண்ட நேரம் காரிலேயே அமர்ந்திருந்தார். ஆனாலும் அவரது காரை கல்லூரி வளாகத்தின் உள்ளே கொண்டு செல்ல போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

பின்னர் தேர்தல் கண்காணிப்பாளர் அபிஷேக் சந்திரா, தேர்தல் நடத்தும் அலுவலரும், செங்கைஆட்சியருமான ச.அருண்ராஜ் ஆகியோரை டி.ஆர்.பாலு சந்தித்து இது குறித்து தெரிவித்தார்.

தேர்தல் கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் அனுமதி சீட்டு வைத்திருந்தாலும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE