கோவையில் 1.18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கணபதி ராஜ்குமார் வெற்றி - அண்ணாமலை இரண்டாம் இடம்!

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக் வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

கோவை மக்களவைத் தொகுதியில் கணபதி ப.ராஜ்குமார் (திமுக), சிங்கை ஜி.ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக), கலாமணி ஜெகநாதன்(நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் உட்பட 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 21 லட்சத்து 06 ஆயிரத்து 128 வாக்காளர்களில், 13 லட்சத்து 66 ஆயிரத்து 597 பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இது 64.90 சதவீதம் ஆகும். கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன.

முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 7,312 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 656 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாருக்கு 2,772 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு 2,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரனுக்கு 887 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகனுக்கு 270 வாக்குகளும் பதிவாகியிருந்தது.

அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்து இறுதிச் சுற்றான 24-வது சுற்றுவரை திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரே அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இறுதியில், கணபதி ப.ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரத்து 068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,68,200.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகள், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 82,543 வாக்குகளும் பெற்றனர்.

திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி வழங்கினார். அப்போது, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE