“மோடி அலை ஒரு மாயை” - 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் திருமாவளவன்

By பெ.பாரதி

அரியலூர்: திமுக கூட்டணியில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 17 சுற்று முடிவில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்து முன்னிலை வகித்து வந்த திருமாவளவன், 17-வது சுற்றில் 4,23,942 வாக்குகளை பெற்றிருந்தார். இதற்கு அடுத்த அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 3,23,286 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,37,088 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி 55,763 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

விசிக வேட்பாளர் திருமாவளவன், 17-வது சுற்று எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனைவிட 1,00,656 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார். மொத்த சுற்றுகள் 23 என்ற நிலையில், 1.50 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று திருமாவளவன் வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனயிடையே திருமாவளவன், வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விழுப்புரம், சிதம்பரம் 2 தொகுதிகளிலேயும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து தமிழகத்தில் ஒரு அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள். மாநில கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.

கடந்த கால உழைப்பு, இண்டியா கூட்டணி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே எங்களது வெற்றிக்குக் காரணம். ஏற்கெனவே நாங்கள் கணித்தபடி தமிழகம் புதுச்சேரியில் 40 க்கு 40 வெற்றி உறுதியாகிவிட்டது. அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணி 225 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. சென்ற முறை பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது ஒரு மாயை. அது உண்மை அல்ல. மோடி அலை என்பது ஒரு மாயை. அது உண்மை இல்லை என மக்கள் இப்போது நிரூபித்துள்ளார்கள்.

அதனால், இம்முறை அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இண்டியா கூட்டணி மக்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறது. இன்னும் பல சுற்றுகள் என்னவேண்டியுள்ளது அது எப்படி வேண்டுமானும் அமையலாம்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடக் கூடாது என பலரும் ஆருடம் சொன்னார்கள். நான் இந்த தொகுதியில் தான் நிற்பேன். இது என் தாய் மண். இந்த மண்ணின் மக்களின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று உறுதியாக நின்றேன். இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் முன் நின்று செய்வார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE