அண்ணாமலைக்கு பின்னடைவு: திமுகவினர் மட்டன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம் @ கோவை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ப.ராஜ்குமார், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் முன்னிலையில் இருந்து வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறார்.

கோவை காந்திபுரம் அண்ணா சிலை முன்பு பட்டாசு வெடித்தும், பேருந்து பயணிகளுக்கு
இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

6-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 1,51,843 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1,22,933 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 63,355 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 21,816 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 28,910 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட முன்னிலையில் உள்ளார்.

தொடர்ந்து அண்ணாமலை பின் தங்கி திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருவதால், கோவையில் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ந்து கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் காந்திபுரத்தில் அண்ணாசிலை முன்பு திரண்டு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் திமுகவினர் திரண்டு 2 ஆடுகளை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு, பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை இலவசமாக வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE