ஓபிஎஸ் பெயரில் போட்டியிட்ட 4 சுயேச்சைகளும் இதுவரை பெற்றவை 1,206 வாக்குகள்!

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் சுயேச்சையாக போட்டியிட்ட நான்கு பன்னீர்செல்வங்கள், இதுவரை 1,206 வாக்குகள் பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் போட்டியிட்டனர். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டார். மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் உட்பட ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் களம் கண்டனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. 4 சுற்றுகள் முடிவில், திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி 97,704 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் 50,407 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் 21,217 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 16,725 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

4 சுற்று முடிவுகளில், ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 579 வாக்குகளும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 107 வாக்குகளும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 310 வாக்குகளும், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 210 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதுவரை இவர்கள் நால்வரும் பெற்ற மொத்த வாக்குகள் 1206 என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு குடைச்சலைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள்தான் ஒரே பெயர், இன்ஷியலைக் கொண்ட நபர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்குரிய அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு இந்தச் செயலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE