புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் 30,000 வாக்குகள் முன்னிலை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 11.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 30,034 வாக்குகள் பாஜகவை விட கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தலில் தமிழகம், புதுவைக்கு தேர்தல் நடந்தது. புதுவை மக்களவைத் தொகுதி தேர்தலில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். புதுச்சேரியில் 739, காரைக்காலில் 164, மாஹேயில் 31, ஏனாமில் 33 என மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 78.90 சதவீத வாக்குகள் பதிவானது.மொத்தமுள்ள 10,23,699 வாக்காளர்களில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் வாக்களித்தனர்.

புதுவையில் லாஸ்பேட்டை அரசு பொறியியல் கல்லூரி, மோதிலால்நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல காரைக்கால், மாஹே, ஏனாமிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் புதுவையில் மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ்நகர், முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு மற்றும் மாகி, ஏனாம் என 12 சட்டப்பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணப்படுகிறது. பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.சில தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் 11.30 மணி நிலவரப்படி 2 லட்சத்து 21 ஆயிரத்து 075 வாக்குகள் எண்ணப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,13,472 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 83,438 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் 30,034வாக்குகள் முன்னிலையில் காங்கிரஸ் உள்ளது. நாம் தமிழர் மேனகா 10,884, அதிமுக தமிழ் வேந்தன் 5,779 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவில் 2699 வாக்குகள் பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE