வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சோழிங்கநல்லூர், கவுண்டம்பாளையம், பல்லடம் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதல் மேஜைகள் போடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 39 மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 58 பொது பார்வையாளர்கள் வந்துவிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்றின் விவரமும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, சென்னை தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) அந்தஸ்தில் உள்ள 12 அதிகாரிகள் இங்கு பணியில் இருப்பார்கள். புகார்களை அவர்கள் கவனிப்பார்கள்.

தபால் வாக்குகள் சுற்றுவாரியாக எண்ணப்படாது. அவை சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, அதில் உள்ள கையொப்பம் சரியாகஉள்ளதா என்பதை பார்த்து, எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்.அதை எண்ணி முடிக்காவிட்டாலும்கூட, 8.30 மணிக்கு மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு கட்டாயம் 5 விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும். இதுதவிர, வேட்பாளர்கள் கோரும் பட்சத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர்கள் முடிவு செய்து, அவர் கூறும் இயந்திரங்களை எண்ண அனுமதிப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கைக்காக, பொதுவாக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், வாக்களித்தவர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் இடங்களில், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, கூடுதல் மேஜைகள் போடப்படுகின்றன. அந்த வகையில், தென்சென்னையின் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 30, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் 20, பல்லடத்தில் 18 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தடையில்லா மின்சாரம்: வாக்கு எண்ணும் மையங்களில் இன்று முதல் நாளை வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்திஉள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE