சென்னையில் இன்று ஜப்பான் வீரர் வழங்கும் நீச்சல் பயிற்சி முகாம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஜப்பான் வீரர் வழங்கும் நீச்சல் பயிற்சி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஓகாசாகி டட்சுகி நீச்சல் கிளப் சார்பில் சென்னை வேளச்சேரியில் உள்ளவிளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் இன்று (ஜூன்4) நடைபெறுகிறது.

இதில், ஜப்பான் நாட்டின் பிரபல நீச்சல்வீரர் யூமா எடோ கலந்துகொண்டு, வீரர், வீராங்கனைகள், மாணவர்கள், பயிற்சியாளர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்குகிறார்.

சர்வதேச விளையாட்டு அறிவு சார்ந்த பரிமாற்றத்தை வளர்க்கவும், தமிழக வீரர்களின் நீச்சல் திறனை மேம்படுத்தவும் இந்த பயிற்சி முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் - ஜப்பான் நீச்சல் வட்டாரங்கள் இடையே நட்புறவை வளர்ப்பதற்கான முயற்சியாகவும் இது அமையும். இந்த முகாமில் காலை 9 முதல் 11 மணி வரை 30 பயிற்சியாளர்களுக்கும், மாலை 5 முதல் இரவு 7.30 மணி வரை 50 மாணவர்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் கலந்துகொள்ள ஆர்வம் உடையவர்கள் aquaticchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 77087 60601 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE