தையூர் பங்களா மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தையூர் பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜேஷ் தாஸ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பீலா வெங்கடேசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘தையூர் பங்களாவுக்கும், ராஜேஷ் தாஸூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் மின் இணைப்பு வழங்கும்படி கோர முடியாது’, என்றார்.

ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், ‘அந்த பங்களாவுக்கான வீட்டுக்கடனை மனுதாரர் தான் செலுத்தி வருகிறார். மனுதாரர் அங்கு தான் வசித்து வருகிறார். எனவே, அவருடைய உடல் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்,’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE