சென்னை: “எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள், அறிந்தவர்கள்!.
ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்றுவிடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது. தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.
உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள். என்பது பாஜகவுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.
எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?. கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர்.
தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர். ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது.
மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்!" என்று பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை வீடியோ: சமீபத்தில் வி.கே.பாண்டியன் குறித்து ஓடிசா பாஜக, தேர்தல் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் தான் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் வி.கே.பாண்டியன் ஒடிசாவின் உணவை, தமிழர் வழக்க்கப்படி வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவின் இறுதியில் ஒடிசாவில் பழக்க வழக்கங்களை தெரியாத பாண்டியன் வேண்டுமா என்று கூறி பை.. பை.. பாண்டியன் என்றும் விமர்சித்து இருந்தது பாஜக.
இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து தான் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளதுடன், "மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்!" என்று கூறி வி.கே.பாண்டியனுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியுள்ளார்.
பின்னணி: தமிழரான வி.கே.பாண்டியன் 2000 ஆண்டு குடிமைப்பணி தேர்வில் ஐஏஎஸ் பெற்று பஞ்சாப் கேடர் அதிகாரி ஆனார். 2002-ல் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணம் முடித்ததால், அம்மாநிலப் பணிக்கு மாறினார். ஒடிசா மக்களின் அன்பை பெற்ற பாண்டியன் கடந்த 2011-ல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட உதவியாளர் ஆனார். முதல்வருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் விருப்ப ஓய்வு பெற்று, பிஜேடியில் இணைந்தார்.
இவரது முயற்சியால் பாஜக, பிஜேடி கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. எனினும் கூட்டணி உருவாகவில்லை. இதையடுத்து பாஜகவினர், வி.கே.பாண்டியனை விமர்சிக்கத் தொடங்கினர். இந்த வகையில், தற்போது பிரதமர் மோடியும் வி.கே.பாண்டியனை விமர்சித்துள்ளார்.
தற்போது ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளுக்கும் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 3-வதுஅணியாக காங். களத்தில் இருந்தாலும் அந்த கட்சியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இல்லை.
தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் அனைவரும் வி.கே. பாண்டியனை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒடிசாவில் வி.கே. பாண்டியனை குறிவைத்தே பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த பாண்டியன், மண்ணின் மைந்தர் கிடையாது. ஒடிசாவை சேர்ந்தவரே மாநில அரசியலில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அனைத்து விமர்சனங்களையும் நேர்மறையாகக் கையாளும் பாண்டியன், பிஜு ஜனதா தள ஆட்சியின் சாதனை பட்டியல்களை மட்டும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். முதல்வர் நவீனுக்கு வாரிசு இல்லாத சூழலில் பாண்டியனே அவரது அரசியல் வாரிசாக கருதப்படுகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago