இளையராஜா பிறந்த நாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் 82-வது பிறந்த நாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார்கள். ஆனால், எனது மகளைப் பறிகொடுத்த காரணத்தால், எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத்தான் இந்தகொண்டாட்டம்” என்றார். இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துதெரிவித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: 50 ஆண்டுகளுக்கு மேலாக தன் இசையால் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து அவரது இசையே. இளையராஜா பல்லாண்டு, தேசங்கள் கடந்து, பல தலைமுறைகளையும் ஆற்றுப்படுத்த வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: ஏறத்தாழ 50 ஆண்டுகளாக தமிழ் சமூகத்துக்கு இசை சேவை புரிந்துவரும் இளையராஜா, 80-வயதைக்கடந்தும் சேவையாற்றுவதை நிறுத்தவில்லை. அவர் செய்த பணிகளுக்கு இணையான அங்கீகாரத்தை நாம் வழங்கவில்லை. இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருது உள்ளிட்ட அனைத்து அங்கீகாரங்களும் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: சந்தோஷத்துக்கு அளவீடு இருக்க முடியுமா, ஆனால் அதற்கு ஓர்உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. சகோதரர்களில் அண்ணனுக்கு இன்று பிறந்தநாள் என்ற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் இளையராஜாவின் பிறந்தநாளில், மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். கலை சொந்தம் என்றென்றும் தொடர்க.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அன்னக்கிளி முதல் ஹங்கேரி வரை கட்டற்ற காட்டருவி போல உள்ளத்தை தொட்டு உருக்கும் இசையை அள்ளித் தந்த தமிழிசையின் உலக அடையாளமும், தமிழரின் பெருமையுமான இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உலகின் கடைசிமனிதன் உலவும்வரை, இசைஞானியின் இசை நிற்காது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE