விம்கோநகர் ரயில்வே சுரங்கப்பாதை பணி முடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: விம்கோநகர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை பணிகள் பல மாதங்களாக முடங்கியுள்ளன. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக விம்கோநகர் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தை சுற்றி, ஜோதிநகர், சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ரயில் பாதை குடியிருப்புகளுக்கு நடுவே இருக்கிறது. ஏற்கெனவே இந்த பகுதியில் இருந்த ரயில்வே கேட் வாயிலாகதான் பேருந்து நிலையங்கள், மார்க்கெட், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த கேட்டை மூடி, புதிய சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, விம்கோநகரில் உள்ள ரயில்வே கேட்டை நீக்கி விட்டு, ரூ.5 கோடியில் புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. இருப்பினும், பல மாதங்களாக இந்த பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவ்வப்போது பெய்த மழையால் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது: இங்குள்ள ரயில்வே கேட் நீக்கப்பட்டு, புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், தோண்டிய பள்ளம் அப்படியே கிடக்கிறது. ஏற்கெனவே பெய்த மழையில் குளம்போல் நீர் தேங்கியது. அடுத்தகட்ட பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். இனியும் தாமதிக்காமல், ரயில்வே, சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE