சர்ச்சைக்குரிய வகையில் மாணவிகளிடம் செல்போனில் பேசிய விவகாரம்; கல்லூரி பேராசிரியை கைது- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை யில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலாதேவி (46). இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் கலைக் கல்லூரியில் 2008-ம் ஆண்டு முதல் கணிதத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

பேராசிரியை நிர்மலாதேவி தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக பெயரைக் கூறி பாலியல் ரீதியில் தவறான வழியில் ஈடுபடும் வகை யில் வற்புறுத்தி பேசிய ஆடியோ, அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிகப் பணிநீக்கம் செய்தது. இதையடுத்து, இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்யக் கோரி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்மலாதேவி விவகாரத்தில் கல்வித்துறை அதிகாரிகள் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து, அவர் கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில் இந்த புகார் குறித்து தனி யார் கல்லூரியின் நிர்வாகக் குழுச் செயலர் ராமசாமி, கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் ஆகியோரிடம் கூடுதல் எஸ்பி மதி, கோட்டாட்சியர் செல்லப்பா, வட்டாட்சியர் கார்த்திகாயினி, டிஎஸ்பி தனபால், மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கூடலிங்கம் ஆகியோர் நேற்று காலை நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து பேராசிரியை நிர்மலா தேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல் லூரி செயலர் ராமசாமி புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற கூடுதல் எஸ்பி மதி கூறும்போது, ‘கல்லூரி நிர்வாகத்திடமிருந்து முறையான புகார் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நிர்மலா தேவி மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

கல்லூரியில் மாணவர்கள் திரண்டு போராட்டம், போலீஸ் விசாரணை என இவ்விவகாரம் தீவிரமடையத் தொடங்கியதால் பேராசிரியை தலைமறைவானார். அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் வீட்டுக்குள் இருக்கிறாரா அல்லது வெளியில் தலைமறைவானாரா என்பது தெரியவில்லை. இத்தகவல் பரவியதையடுத்து, நிர்மலா தேவியின் வீட்டின் முன்பு பொதுமக்களும் போலீஸாரும் ஏராளமான நிருபர்களும் குவிந்தனர்.

இதற்கிடையே நிர்மலா தேவி மீது கல் லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் அவரிடம் விசாரணை நடத்த அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் வந்தபோது, வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு நிர்மலாதேவி பல மணி நேரம் வெளியே வர மறுத்தார்.

மாலை 6.45 மணி வரை பேராசிரியை நிர்மலாதேவி வீட்டு வாசலில் போலீஸாரும் நிருபர்களும் காத்திருந்தனர். மாதர் சங்கத்தினர் மற்றும் போலீஸார் அழைத்தும் பேராசிரியை நிர்மலாதேவி கதவைத் திறக்க மறுத்துவிட்டார். அதையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே செல்ல திட்டமிட்டனர்.

அப்போது வீட்டுக்குள் இருந்த நிர்மலாதேவியிடம் பேசிய போலீஸார், அவரை ரகசியமாக அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். அதையடுத்து, அப்பகுதியில் இருந்து நிருபர்களும் பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். வீட்டின் அருகில் செல்ல நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து, காவல்துறையினர் வீட்டு வாச லில் காரை நிறுத்திக்கொண்டு வீட்டுக்குள் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு தகவல் தெரிவிக்க, நொடிப் பொழுதில் கதவைத் திறந்து கொண்டு வாச லில் தயாராக நின்ற வாகனத்தில் நிர்மலா தேவி ஏறினார். அதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்துக்கும் அதைத்தொடர்ந்து, மகளிர் காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுநர் புரோஹித் உத்தரவு

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தா னம் தலைமையில் உயர் மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் ஒழுங்கீனமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. எனவே, இந்த விஷயத்தில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடாமல் இருக்கும் வகையில் இதுகுறித்து உடனடியாக விசாரிக்க வேண்டியது அவசி யமாகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆர்.சந்தானம், தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி, தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப்பின், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உறுப்பினராகவும இருந்துள்ளார். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதியான நடவடிக்கை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘மனித சமுதாயம் ஏற்க முடியாத, வேதனைக்குரிய, கண்டனத்துக்குரிய வகையில் பேராசிரியை பேசியுள்ளார். இதுபோன்ற கருப்பு ஆடுகளை களையெடுக்க அரசு உறுதி யாக உள்ளது. அவர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினர் இந்த விவகாரத்தில் யார் என்ன பேசினார்கள் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்