கள்ளக்குறிச்சியில் சூறாவளிக் காற்றுடன் மழை

By என். முருகேவல்

கள்ளக்குறிச்சி: கடந்த 4 தினங்களாக கடும் உருக்கத்துடன் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பகுதியில் இருள் மேகத்துடன் பலத்தக் காற்று வீசத் துவங்கியது. அப்போது லேசான மழை பெய்யத் துவங்கியதும் பலத்தக் காற்று சூறாவளிக் காற்றாக மாறியது.

அப்போது கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகே மழையுடன் வீசிய சூறாவளிக் காற்றால், சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கடைகளின் மேற்கூரைகள், பெயர்த்துக்கொண்டு, காற்றில் பறந்தவாறு சாலையில் விழுந்தது. இதனால் சுங்கச்சாவடியை கடந்த கார்கள் மற்றும் லாரிகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடை உரிமையாளர்கள் காற்றில் பறந்து சாலையில் கிடந்த தகர மேற்கூரைகள், பிளாஸ்டிக் நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தியதையடுத்து போக்குவரத்து சீரானது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த காயமோ உயிர் பாதிப்போ ஏற்படவில்லை.

மழையினால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்த போதிலும், சுங்கச்சாவடியை ஒட்டிய வணிகர்களும் மிகுந்த சோதனைக்குள்ளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE