9 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 4 முதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களிலும், 2-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று முதல்3-ம் தேதி வரை குமரிக்கடல்பகுதிகள், மன்னார் வளைகுடாஅதனை ஒட்டிய தென் தமிழககடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

வேலூரில் 110 டிகிரி: தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இது மே மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். நேற்று வழக்கமான அளவை விட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 1983-ம் ஆண்டு பதிவான 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவே இதுவரை வேலூரில் மே மாதத்தில் பதிவான உச்ச அளவாகும்.

மேலும், நேற்று திருத்தணியில் 108 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி, ஈரோட்டில் 105 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, திருச்சி, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, கரூர் பரமத்தி, மதுரை மாநகரம், சேலம் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி, திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. நேற்று மொத்தம் 17 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE