காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலியிலும் நேற்று அதிமுக நடத்திய போராட்டம் மதியம் வரையும், திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டம் 15 நிமிடத்திலும் நிறைவுக்கு வந்தது. உணர்வுபூர்வமாக அவர்கள் பங்கேற்காததால் தன்னெழுச்சியை பார்க்க முடியவில்லை.
பாளையங்கோட்டையில் நேருஜி கலையரங்கத் திடலில் நடைபெற்ற அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முதலில் அமைக்கப்பட்ட பந்தலையும் தாண்டி கூட்டம் அதிகரித்ததால் பந்தலை 3 முறை விரிவாக்கம் செய்து, நாற்காலிகளை வரவழைத்து போட்டிருந்தனர். போராட்டத்துக்காக திருவனந்தபுரம் சாலை, நூற்றாண்டு மண்டப சாலை, சித்த மருத்துவக் கல்லூரி சாலைகளில் இருபுறமும் பதாகைகளை அதிமுகவினர் வைத்திருந்தனர்.
அவற்றில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வாசகங்களுக்கு பதில், தமிழக முதல்வர், துணை முதல்வர் படங்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம், உள்ளூர் அதிமுக நிர்வாகிகளின் படங்கள் இடம் பெற்றிருந்தன.
நோக்கம் நிறைவேறவில்லை
போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகளை வரவேற்கும் வகையிலும், அவரவர் ஆதரவாளர்களின் செல்வாக்கை வெளிக்காட்டுவது போலும் அலங்காரத் தோரணங்களாக இவை இருந்தன. போராட்டத்துக்கு அதிக கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக அதிமுக நிர்வாகிகள் செயல்பட்டதால் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.
போராட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக பேச்சாளர்கள் உள்ளிட்ட யாருமே காவிரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்க வேண்டும், அதற்கான தேவை என்ன உள்ளிட்டவற்றை மையப்படுத்தி பேசவில்லை. திமுகவை திட்டித் தீர்க்கவும், அதிமுக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, முதல்வர் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசவும் உண்ணாவிரத பந்தலை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக அதிமுகவினர் பயன்படுத்திக் கொண்டனர்.
உணவகங்களில் கடும் கூட்டம்
காவிரிக்காக நடைபெற்ற உண்ணாவிரத பந்தலை கட்சி மேடையாக்கி விட்டனர். மத்திய அரசை விமர்சித்தும் அவர்கள் பேச முன்வரவில்லை.
இந்த போராட்டத்துக்காக வேன்களில் வந்திருந்தவர்கள் பலரும் பிற்பகல் 1.30 மணிக்குமேல் பாளையங்கோட்டையிலிருந்து தங்கள் வாகனங்களில் திரும்பிச் சென்றதை பார்க்க முடிந்தது. ஆங்காங்கே டீ, இளநீர், குளிர்பான கடைகளிலும், புரோட்டா கடை உள்ளிட்ட அனைத்து உணவகங்களிலும் கடும் கூட்டம் நிலவியது.
திமுக தரப்பிலும் மாற்றமில்லை
அதிமுக போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகிலேயே பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தையொட்டி திருவனந்தபுரம் சாலையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த கூட்டணி கட்சியினர் தங்கள் கட்சிகளின் கொடிகளை உயரே தூக்கிப்பிடிப்பதிலும், நிர்வாகிகள் பலரும் காட்சி ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதிலுமே தங்கள் நேரத்தை செலவழித்தனர்.
பாதிப்புகளை கூறவில்லை
இத்தனைக்கும் 15 நிமிடத்துக்கு கூட போராட்டம் நடத்தப்படவில்லை. சிறிதுநேர கோஷத்துக்குப்பின் கட்சி நிர்வாகிகள் தங்களது கார்களில் வேகமாக திரும்பிச் சென்று விட்டனர். பிரதான எதிர்க் கட்சியான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என்றெல்லாம் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இந்த போராட்டத்திலும் காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசியம், காவிரி நீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்களில் காணப்படும் பாதிப்புகள் ஆகியவை குறித்து விவரமாக யாரும் எடுத்துக் கூறவில்லை. யாருக்குமே இதற்கு நேரமில்லை போலும்.
அவதிக்குள்ளான மக்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த திருநெல்வேலியை சேர்ந்த எம்.பி., முத்துக்கருப்பன் திடீர் பல்டியடித்த மறு நாளில், திருநெல்வேலியில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளால் உணர்வுபூர்வமற்ற போராட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக் கின்றன.
இந்தப் போராட்டங்களால் பாளையங்கோட்டையில் நேற்று பிற்பகல் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானது தான் மிச்சம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago