பூந்தமல்லி - பரந்தூர், கோயம்பேடு - ஆவடி வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்ட அறிக்கை 6 மாதத்தில் தயாராகும்

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், பூந்தமல்லி – பரந்துார் மற்றும் கோயம்பேடு - ஆவடி வரை நீட்டிப்பு ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள 3 வழித்தடங்களையும் இணைத்து நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 43.63 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட் டது. இவற்றில் 2 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது: பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாக விரிவானதிட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதில் பாதை, அதன் நீளம்,வழித்தட வகைகள், நிலையங்கள் அமையவுள்ள இடம், நிலையங்களின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை, திட்டமதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.

பூந்தமல்லி - பரந்தூர் நீட்டிப்புதிட்டத்தில் நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, பெரும்புதூர் உள்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக்கூறு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு ரூ.10,712கோடி. இத்தடத்தில் பெரும்பாலும் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டஅறிக்கை 6 மாதங்களில் தயாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

கோயம்பேடு - ஆவடி நீட்டிப்பு: இதேபோல், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வதுவழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்த ஆவடி வரை நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒரு நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாகஆவடி வரை 16.07 கி.மீ. தொலைவுக்கு சுமார் 15 உயர் மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை ரூ.6,376.18 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயிலை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், 6 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE