சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் தொகுப்பூதியத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க கோரிக்கை

By எம். வேல்சங்கர்

சென்னை: தமிழகத்தில் சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர், பயிற்சியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை ரூ.18,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த வேண்டும் என்று அறிவுசார் குறைபாடுள்ளோருக்கான பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அறிவுசார் குறைபாடுள்ளோருக்கான பேரமைப்பின் பொதுச்செயலாளர் எம்.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற 299 சிறப்புப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகள் சற்றும் பொருத்தப்பாடு இல்லாத ‘தனியார் பள்ளி ஒழுங்காற்றுச் சட்டத்தின்’ கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

எனவே, சிறப்பு நிறுவனங்களுக்கென்றே பிரத்யோகமான சட்டவிதிகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட 299 சிறப்புப் பள்ளிகளில் 2 சிறப்பு ஆசிரியர்கள், ஒரு பயிற்சியாளர் ஆகியோருக்கு அரசு சார்பில் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தொகுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசு தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.

மேலும், இந்த சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை ரூ.18,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த வேண்டும். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கீழ் பணியாற்றும் இதே தகுதி படைத்த சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.25,000 வழங்கப்படுகிறது.

சமவேலைக்கு சமஊதியம் என்ற அரசின் கொள்கைப்படி ஊதிய உயர்வு கோரப்படுகிறது. சிறப்புப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்களை நிர்வாகப்பணிகளுக்கு செல்லுமாறு வற்படுத்தப்படுகிறது. சிறப்புப்பள்ளிகள் இயக்கம் இதனால் பெரிதும் பாதிக்கப்படைகிறது. எனவே, இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE