அக்னி நட்சத்திரம் முடிந்தது; 12 இடங்களில் வெயில் சதம்: வெப்பநிலை நீடிக்கும் என தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஒருசில நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4-ம் தேதி தொடங்கியது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த ஆண்டில் அதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், அக்னி நட்சத்திர காலத்தில் பெரும்பாலும், மழை, குளிர்ச்சியான சூழலே நிலவியது.

கடந்த 22-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள பகுதிகளில் அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும்.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (மே 30) வரை லேசானது முதல் மிதமாகவும், மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடனும் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 35-37 டிகிரி ஃபாரன்ஹீட் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 86 முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் 5 செ.மீ. மழை பதிவானது.

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, வெப்பநிலை 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 105, திருத்தணி, வேலூரில் 104, மதுரை நகரம், விமான நிலையம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருப்பத்தூரில் 101, நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE