கயத்தாறு அருகே சூறைக்காற்றில் 1,000+ பப்பாளி மரங்கள் சாய்ந்து சேதம்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் சுமார் ஆயிரம் பப்பாளி மரங்கள் சாய்ந்து விழுந்தன.

கயத்தாறு அருகே காப்புலிங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம்(53). இவருக்கு சொந்தமான தோட்டம் காப்புலிங்கம்பட்டியலிருந்து குமாரகிரி செல்லும் சாலையில் உள்ளது. இந்த தோட்டத்தில் செல்வம், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1200-க்கும் மேற்பட்ட பப்பாளி விதைகளை நடவு செய்திருந்தார்.

இந்த விதைகளில் பப்பாளி மரங்கள் வளர்ந்து, பூ பூத்து, காய் காய்த்து பருவம் அடைந்த நிலையில் உள்ளன. இந்நிலையில் இன்று மதியம் திடீரென பலத்த காற்று வீசியது. இதில் சுமார் 1000 பப்பாளி மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. இதில் பப்பாளி மரங்களில் காய்த்து இருந்த பப்பாளிகள் சுமார் 50 டன்னுக்கு மேல் கீழே விழுந்து சேதமடைந்தன.

இதுகுறித்து விவசாயி செல்வம் கூறியதாவது: “பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகிறோம். கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். கோடை காலம் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பப்பாளி நடவு செய்து பராமரித்து வந்தேன்.

இந்நிலையில் பலத்த காற்று வீசியதில் பப்பாளி மரங்கள் முறிந்து கீழே விழுந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வருவாய்துறையினர் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மேலும், இதே பகுதியில் சண்முகராஜ் என்பவரது தோட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட பப்பாளி மரம் சாய்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE