கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யானை வழித்தட வரைவு: இந்து முன்னணி வலியுறுத்தல்

By டி.ஜி.ரகுபதி 


கோவை:யானை வழித்தடங்கள் என்ற பெயரில் கோயில்களை குறிவைக்கும் போக்கை கைவிட வேண்டும்.எனவே கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் யானை வழித்தட வரைவை ஏற்படுத்த வேண்டும்’, என்று கோவையில் நடந்த இந்து முன்னணி செயற்குழுக் கூட்டத்தில், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார் பேசினார்.

இந்து முன்னணி இயக்கத்தின் கோவை மாநகர் மாவட்ட செயற்குழுக் கூட்டம், காட்டூரில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று (மே 28) நடந்தது. இக்கூட்டத்துக்கு இந்து முன்னணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, ‘யானை வழித்தடங்கள் என்ற பெயரில் கோயில்களை குறிவைக்கும் போக்கை கைவிட வேண்டும். மருதமலை, பூண்டி வெள்ளியங்கிரி போன்ற கோயில்களுக்கு இதனால் சிக்கல் ஏற்படும். பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.எனவே கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் யானை வழித்தட வரைவை ஏற்படுத்த வேண்டும்.

பூண்டி வெள்ளியங்கிரி மலையில் இந்த மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். ஆனால், பூண்டி மலையில் பக்தர்களை அனுமதிப்பதில்லை என்ற பொய்யான செய்தியை பரப்புகின்றனர். இந்த வதந்தியை தடுத்து நிறுத்த வேண்டும். மராட்டிய மன்னர் வீரசிவாஜி முடி சூட்டிக்கொண்ட நாளை இந்து முன்னணி பேரியக்கம் ஆண்டுதோறும் இந்து சாம்ராஜ்ய விழாவாக கொண்டாடுகிறது.

அதேபோல் நடப்பாண்டும், கோவை மாநகரில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த விழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது’என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE