கடற்கரையில் தவித்த கடலூர் சிறுமி: பெற்றோரை தேடி ஒப்படைத்த புதுச்சேரி போலீஸார்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சுற்றுலாவுக்கு வந்து புதுச்சேரி கடற்கரையில் தவித்த கடலூர் சிறுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று பெற்றோரை தேடி பிடித்து புதுச்சேரி போலீஸார் ஒப்படைத்தனர்.

கோடை விடுமுறை காலமாக இருப்பதால் புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலாவுக்கு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் புதுச்சேரி கடற்கரையில் 6 வயது சிறுமி தனது அம்மாவை காணவில்லை என அழுதபடி நின்றிருந்ததை பார்த்தோர் போலீஸாருக்கு தகவல் தந்தனர். அப்போது பெரியக்கடை போலீஸார் அங்கு சென்று சிறுமியை விசாரித்தபோது மரியா என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சுற்றுலாவுக்கு கடலூரில் இருந்து வந்தது மட்டும் தெரிவித்துள்ளார். செல்போன் எண், முகவரி ஏதும் தெரியவில்லை. இதையடுத்து குழந்தையை பெரியக்கடை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து சென்று அனைத்து காவலர்களுக்கும் தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடற்கரை பகுதி முழுக்க போலீஸார் தேடத்தொடங்கினர். அப்போது குழந்தையை காணாமல் தேடிக்கொண்டிருந்த குழந்தையின் தாய் செரீனா பேகத்தை கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். கடலூரைச் சேர்ந்த இவர்கள் சுற்றுலா வந்தபோது குழந்தை காணாமல் போனது தெரிந்தது. அதையடுத்து பெரியக்கடை காவல் நிலையம் வரவழைத்து குழந்தையை போலீஸார் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE