சாவர்க்கர் 141-வது பிறந்த தினம்: உதகையில் தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் வீர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 141-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் தங்கியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் உருவப் படத்துக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, சாவர்க்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு ராஜ் பவன் சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் தள பதிவில், “பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர்.

எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE