சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதி கட்டமாக 7-வது கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் முடிவடைந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:
» பெண்ணின் வயிற்றில் பஞ்சு ரோலை வைத்து தைத்த மருத்துவர்கள்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
» பிரதமர் மோடி குமரி - விவேகானந்தர் பாறையில் மே 30 முதல் 3 நாள் தியானம்
தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 39 மையங்களிலும் உள்ள 43 கட்டிடங்களில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக 234 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மொத்தம் 3,300 மேஜைகள்: பொதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில், தேவைப்படும் இடங்களில், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கூடுதல் மேஜைகள் அமைக்கப்படும். அதன்படி, அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், சில மையங்களில் 30-க்கும் மேற்பட்ட மேஜைகள் போடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும். இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.
வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் அலுவலர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்காக 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் என மொத்தம் 38,500-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. அடுத்து, 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத் தப்படுவார்கள்.
ஜூன் 4-ம் தேதி காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கும். மின்னணு வாக்குகள் எண்ணப்படும்போதே, தபால் வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெறும். அதே நேரம், தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, இறுதி சுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், சிதம்பரம், பொள்ளாச்சி, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் 9 முதல் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளில் பெரும்பாலும் மதியத்துக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
கரூரில் 54, தென்சென்னையில் 41 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கு அதிக மேஜைகள் போடப்படுகின்றன. இதன்மூலம் இந்த தொகுதிகளிலும் முடிவுகளை விரைவாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்காக பொதுவாக 14 மேஜைகள் போடப் படும் நிலையில், ஒவ்வொரு மேஜைக்கும் கட்சிக்கு தலா ஒரு முகவர், தலைமை முகவர் என ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை, மேஜைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கேற்ப முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஒவ்வொரு சுற்றின்போதும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்டிருக்கும் பெட்டியில் வைக்கப்பட்ட சீல் சரியாக இருக்கிறதா என்பது, முகவர்கள் முன்னிலையில் உறுதிசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago