“தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம்” - டி.ராஜா கருத்து

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்’, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசினார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளருமான தியாகி சி.எஸ் சுப்பிரமணியம் நினைவாக, ஈரோடு மாவட்டம் கோபியில் சிஎஸ்எஸ் அரங்கம் (மார்க்சியப் பள்ளி மற்றும் நூலகம்) திறப்பு விழா திங்கள்கிழமை மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு, பேசியதாவது: ‘கம்யூனிசம் என்பது வெறும் அரசியல் சித்தாந்தம், கொள்கை மட்டுமல்ல. கம்யூனிசம் ஒரு பண்பாடு; அறநெறி. புற வாழ்விலும், அகவாழ்விலும் மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்தான் நல்ல கம்யூனிஸ்ட்டுக்கான இலக்கணம். கம்யூனிஸ்டுகள் மக்களையும், நாட்டையும் நேசிப்பவர்கள்.

வர்க்க பேதம், சாதி பேதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவது, ஆண், பெண் சமத்துவம் கொண்டு வருதல் போன்றவற்றை கம்யூனிஸ்டுகள் தான் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். இன்று நம் முன் இருக்கும் சவால் சாதாரணமானது அல்ல. மதவெறி, பாசிஸ்ட் பிடியில் இருந்து, பாஜக, ஆர்எஸ்எஸ். பிடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இதற்காக கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்று களம் காண வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக தோற்கடிக்கப்படும் என நம்புகிறோம். இண்டியா கூட்டணி மூலம் மாற்று ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. பாஜகவைத் தோற்கடிக்க, இந்திய மக்கள் ஆவேசத்துடன் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் நேர்மையான ஆணையமாக செயல்படுகிறதா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. மதவெறியைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசுகிறார், என நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தேன். அவரிடம் விளக்கம் கேட்பதற்கு பதிலாக, நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பாஜக தலைவர் நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதுகிறது. கூடவே, காங்கிரஸ் தலைவருக்கும் ஒரு கடிதம் எழுதுகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், மக்கள் தீர்ப்பு பாஜகவுக்கு எதிரான தீர்ப்பாக இருக்கும். நாட்டை காப்பாற்றும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமையும்.அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என பாஜக நினைக்கிறது. மீண்டும் மோடி பிரதமரானால், அதனைச் செய்வார் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பேரிடரை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். முன் எப்போதும் இல்லாத வகையில், நாடாளுமன்றத்தில் 140-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பாஜக ஆட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் முடங்கினால், ஜனநாயகம் செத்துப் போகிறது. இதனை மாற்ற, நாடாளுமன்றத்தில், இடதுசாரிகள், முற்போக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

இண்டியா கூட்டணியைக் கண்டு பிரதமர் மோடி அச்சப்படுகிறார். அதனால், அந்நிய நாடுகளுடன் தொடர்புபடுத்தி பேசுகிறார். நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் ஜனநாயகத்தையும், நாட்டையும் காக்க கம்யூனிஸ்ட் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தோழமையினரை அரவணைத்து செல்ல வேண்டும்’, என்று அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், கே.சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE