“மாஞ்சோலை பகுதி எஸ்டேட்களை தமிழக அரசு நிர்வகிக்க வேண்டும்” - முன்னாள் சபாநாயகர் கோரிக்கை

By த.அசோக் குமார்

திருநெல்வேலி: ‘மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள எஸ்டேட்களை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து, தேயிலை தோட்டங்களை தொடர வைத்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா.ஆவுடையப்பன் மாஞ்சோலை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் வந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ‘திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் கடந்த 95 ஆண்டுகளாக ஐந்து தலைமுறையாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர்.

கடந்த 12.2.1929 அன்று சிங்கம்பட்டி ஜமீன்தார் 8373.57 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (பி) லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம் மூலம் வழங்கியிருக்கிறார். அந்த குத்தகை ஆவணத்தின் வாயிலாக வனப்பகுதியில் தேயிலை, காப்பி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்ற பணப்பயிர்களை பயிரிட ஆரம்பித்தது. அந்த பணிகளுக்காக கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்த பகுதியில் தபால் அலுவலகம், தொலைத்தொடர்பு அலுவலகம், குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகம், அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள், தேயிலை தொழிற்சாலை, மருத்துவமனை, குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வழிபாட்டு தலங்கள், வனத்துறை விடுதி, சிங்கவால் குரங்கு கண்காணிப்பு கட்டிடம் போன்றவை உள்ளன.சுமார் 5 ஆயிரம் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணிபுரிந்த பகுதியில் தற்போது 2 ஆயிரம் தொழிலாளர்களே பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் மக்கள்தொகை உள்ள இந்த பகுதியில் 70 குடும்ப அட்டைகள் உள்ளன.

இந்த எஸ்டேட் பகுதிகளுக்கு பிபிடிசி நிர்வாகம் தனது பெயரில் இரயத்துவாரி பட்டா வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் அந்த வழக்கில் அமலில் உள்ள குத்தகை ஒப்பந்தத்தின்படியான 99 வருடத்தில் 2028 வரையிலான மீதமுள்ள 10 ஆண்டுகள் பிபிடிசி நிர்வாகம் தொடர்ந்து எஸ்டேட் பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்டேட் பகுதியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வனத்துறைக்கு தடை ஏதும் இல்லாத காரணத்தால் இந்த எஸ்டேட் பகுதிகள் மற்றும் எஸ்டேட் சாலைகள் உள்ளிட்ட 8373.57 ஏக்கர் பகுதி உள்ளிட்ட அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள 23 ஆயிரம் ஏக்கரையும் காப்புக்காடாக கடந்த 28.2.2018 அன்று அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற ஜூன் மாத இறுதிக்குள் எஸ்டேட்டை காலி செய்து, அங்கிருந்து எல்லோரும் வெளியேற வேண்டும் என பிபிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் 5 தலைமுறையாக மலைப்பகுதியிலேயே வாழ்ந்ததால் அவர்களுக்கு கீழே சமவெளி பகுதியில் சொந்த இடமோ, வீடோ கிடையாது. அவர்களுக்கு தோட்ட தொழில் தவிர எந்த தொழிலும் தெரியாது. எஸ்டேட்டை விடு அவர்களை வெளியேற்றும்போது அவர்கள் அகதிகள்போல் ஆகிவிடுவார்கள். விருப்ப ஓய்வு என்ற பெயரில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணியில் இருந்து நிறுத்துவதற்கு பிபிடிசி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தொழிலாளர்கள் மூலம் தெரியவருகிறது.

கடந்த 1967-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு குடிபெயர்ந்து வந்த தமிழர்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தேயிலை தோட்டக் கழகம் உருவாக்கி, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உத்தரவாதப்படுத்தியது. அதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள எஸ்டேட்களை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து, தேயிலை தோட்டங்களை தொடர வைத்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’,என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்