“ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவா தலைவர்... அதிமுக உடன் விவாதிக்க தயார்” - அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: "ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவா தலைவர். இதில் அதிமுகவினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995-ல் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்துத்துவா என்னவென்பது பற்றிய வழக்கின் தீர்ப்பு அது. அதனை அதிமுக தலைவர்கள் படிக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், "பாஜக நிர்வாகிகள் உடன் தேர்தல் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஜூன் 4-ல் மோடி 3-வது முறையாக ஆட்சியமைக்கும்போது தமிழகத்தில் இருந்து பாஜக எம்பிக்கள் செல்வார்கள் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். இந்த 6 கட்ட தேர்தலில் மக்களின் எழுச்சியை பார்க்கும்போது பாஜக தேசிய அளவில் தனியாக 370 இடங்களில் வெல்லும் என்பது தெரிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. எங்கள் பார்வையில் நிறைய இடங்களில் மும்முனை போட்டியாக இருந்தது. கடைசி ஒரு வாரத்தில் அது இருமுனை போட்டியாக மாறியது. ஏற்கெனவே கூறியது போல், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கங்களை வெல்லும். நிறைய இடங்களில் கடுமையான போட்டி இருந்தது உண்மை. வெற்றி வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளோம்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பெரிய தலைவர்கள் இம்முறை போட்டியிட்டனர். எங்களின் எண்ணம், இரட்டை இலக்கை வெல்வோம் என்பதில் தெளிவாக உள்ளோம்.

பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்த நடிகர் பிரகாஷ் ராஜ். ஒரு நடிகராக அவருக்கு மரியாதை உண்டு. அதை தாண்டி அரசியலில் அவரின் குரலுக்கு மரியாதை அளிக்க விரும்பவில்லை. பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்ததே அவரின் அரசியல் அனுபவம். மோடியை திட்டுவதை மட்டுமே தனது முழுநேர வேலையாக கொண்டுள்ளார் அவர். எனவே, பிரகாஷ் ராஜ் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை. கடவுள் அனுப்பியதாக பிரதமர் மோடி பேசியதை திரித்து இங்கே சிலர் மேடையில் பேசுகிறார்கள். பிரதமர் மோடி இந்தியில் பேசுவதை புரியாமல் இங்கு பேசினால் அதற்கு என்ன பதில் சொல்வது?.

திருமாவளவன் ஒரு எம்.பி. பொறுப்பாக பேச வேண்டிய நபர் அவர். அண்ணன் திருமாவளவனுக்கு எனது ஒரு வேண்டுகோள்... பேசும்போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை உணர்ந்து பேச வேண்டும். மோடி எதிர்ப்பு என்பதை பல எல்லைக்கு கொண்டுச் சென்றுள்ளதை மோடியே கூறி வருகிறார். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை மாற்று கட்சியினருக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. ஸ்டாலின் மாதிரி நாங்கள் இரவு இரண்டு மணிக்கு யாரையும் கைது செய்ய மாட்டோம். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்துரிமையை பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது.

மாடுகளை சாமியாக கும்பிடுபவன் நான். மாட்டை வைத்துதான் எனது பிழைப்பு இருக்கிறது. விவசாயியாக மாடுகளை வைத்து தான் தொழில் செய்கிறேன். அதற்காக மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களை சாப்பிடக் கூடாது என்று நான் சொல்லமாட்டேன். அது அவர்கள் உரிமை. ஆனால், என் வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது நான் கொடுக்கும் உணவை தான் சாப்பிட முடியும். மகாத்மா காந்தி தனது புத்தகத்தில் மாட்டு இறைச்சி குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை ஒருமுறை ஈவிகேஎஸ் இளங்கோவன் படிக்க வேண்டும்.

ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. இதில் அதிமுகவினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995-ல் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்துத்துவா என்னவென்பது பற்றிய வழக்கின் தீர்ப்பு அது. அதனை அதிமுக தலைவர்கள் படிக்க வேண்டும். இந்துத்துவா என்பது வாழ்க்கை முறை. அது மதம் கிடையாது. அனைவரையும் அரவணைப்பது தான் இந்துத்துவா.

1984ல் ஜெயலலிதா ராஜ்ய சபா எம்பியாக நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஜம்மு காஷ்மீரில் ஆர்டிக்கள் 370-ஐ எடுக்கப்பட வேண்டும் என்று பேசினார். ஆனால், இன்றைக்கு ஆர்டிக்கள் 370 பற்றி அதிமுகவின் நிலைப்பாடு என்ன. இதேபோல் 1992-ல் கரசேவை என்பது தவறான வார்த்தை கிடையாது என்று அதற்கு ஆதரவாக பேசினார் ஜெயலலிதா. கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்தார் அவர். இதேபோல், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ராமர் கோயில் கட்ட கையெழுத்து இயக்கம் நடத்தினார். அதன் நிறைவு விழாவில் அத்வானி பங்கேற்றார்.

அதேபோல் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றும் பேசிய ஜெயலலிதா, ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சொன்னார். ஆனால் இன்றைக்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன, ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து தற்போதைய அதிமுக விலகி செல்கிறது. நான் கூறுவதை அதிமுக எதிர்த்தால் விவாதத்துக்கு பாஜக தயாராக உள்ளது. எஸ்டிபிஐ கூட்டணிக்காக மாற்றி பேச வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு எழுந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்னையில் தகர்க்கபட்ட போது அதனை கட்டிக்கொடுப்பதாக சொன்னார் ஜெயலலிதா. இப்போது சொல்லுங்கள் அவரை இந்துத்துவாவாதி என சொல்வதில் என்ன தவறு" என்று கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE