பயன்பாட்டுக்கு வரும் முன்பே ‘பேட்ச் ஒர்க்’... விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை அவலம்!

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்ல புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை தரமற்ற முறையில் போடப்படுள்ளதாகவும், சாலை திறப்பதற்கு முன்பாகவே பாலங்கள் உள்ள பகுதியில் ‘பேட்ச் ஒர்க்’ செய்யப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டிள்ளனர்.

விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி 2 வருடங்களுக்கு முன்பு ரூ.6,431 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது. விழுப்புரம், ஜானகிபுரம் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள் நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள், புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்தச் சாலை தார்சாலையாக இல்லாமல் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரத்தில் இருந்து கண்டமங்கலத்தை அடைவதற்குள் பத்து மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்தச் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஜானகிபுரம், திருப்பாச்சனூர், கோலியனூர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் மற்றும் சாலையின் நடுவே ஏற்பட்ட பிளவுகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும், சிமென்ட் சாலை சமமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் அதிர்வுகள் அதிகமாக உள்ளதாகவும், குறிப்பாக, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது அதிகப்படியான அதிர்வுகள் உணரப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும், மழைக் காலங்களில் சிமென்ட் சாலையில் பயணிப்பது கடினமாக இருப்பது உடன், பிரேக் பிடிக்கும்போது வாகனங்கள் வழுக்கிச் செல்வதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறனர்.

முறையாக திட்டமிட்டு சாலை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்படாததுடன், முறையான வழிகாட்டி பலகைகள் இல்லாததால் எந்த ஊருக்கு எப்படிப் செல்வது என்று தெரியாமல் வானக ஓட்டிகள் குழப்பமடைகின்றனர். நான்கு வழி சாலை பணிகள் முழுமை பெற்று பயன்பாட்டுக்கு திறக்கும் முன்பாகவே சாலைகள், மேம்பாலங்கள் என பல இடங்களில் சாலை பழுதாகி இருப்பதால், பயன்பாட்டுக்கு வந்தால் எத்தனை காலத்துக்கு தாங்குமோ என்றும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களிடம் கேட்டபோது, “பாலங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலையின் நடுவே வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்கபட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய டெல்லியிலிருந்து ஆறு பேர் கொண்ட குழு விரைவில் வரவிருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE