புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் | தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்: ஈசிஆரில் அமைகிறது

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திமுகவுக்குச் சொந்தமான இடத்தில் கலைஞர் அறிவாலயம் புதுச்சேரி நகர குழுமத்தின் அனுமதி பெற்று கட்டப்படவுள்ளது.

புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடந்தது. மாநில அவைதலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் எம்எல்ஏ அனிபால் கென்னடி, மாநில பொருளாளர் எம்எல்ஏ செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எம்எல்ஏ சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தீர்மானங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினார். இதில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவை, மாநிலம் முழுவதும் தொண்டர்களின் குடும்ப விழாவாக மக்கள் விழாவாக கோலாகலமாக கொண்டாடவுள்ளோம். வரும் ஜூன் 3.ம் தேதி புதுச்சேரி மாவட்டத்தில் தொகுதிதோறும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்படும்.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லம், கருணை இல்லம், பார்வையற்றோர், மனநலம் குன்றியோர் பள்ளிகளில் அறுசுவை உணவு வழங்கப்படும். ஜூன் மாதம் முழுவதும் ரத்ததானம், மருத்துவ முகாம்கள் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும். தொகுதிதோறும் பகுத்தறிவுப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திமுகவுக்குச் சொந்தமான இடத்தில் புதுச்சேரி நகர குழுமத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி மாநில திமுகவின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்போடு கலைஞர் அறிவாலயம் கட்டப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE