2026 தேர்தலை முன்னிட்டு கட்டமைப்பை வலுப்படுத்த தயாராகும் திமுக: அமைச்சரவை, நிர்வாகிகளை மாற்ற ஸ்டாலின் திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், அடுத்ததாக 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதே கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், அமைச்சரவை மற்றும் கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வந்தாலும், கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே அடிப்படை பணிகளை தொடங்கிய முதல் கட்சி திமுக. பாஜக எதிர்ப்பை பலப்படுத்தும் விதமாக, முதலில் சமூக நீதி கூட்டமைப்பை தொடங்கி, தற்போதைய இண்டியா கூட்டணிக்கு வித்திட்டது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.

இண்டியா கூட்டணியில் சில கட்சிகள் மாற்றி யோசித்த போதும், பாஜக எதிர்ப்பில் இன்றளவும் உறுதியாக திமுக உள்ளது. திமுகவை பொறுத்தவரை இண்டியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக நம்பியுள்ளது. இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவையில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், திமுக தலைமை அடுத்தகட்டமாக தமிழகத்தில் ஆட்சியை மீண்டும் தக்க வைப்பதற்கான யோசனையில் உள்ளது.

குறிப்பாக, அமைச்சர் உதயநிதிக்கு அடுத்தகட்டமாக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் தொடர்ந்து எழும் நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவை ஒட்டிய இந்த மாற்றத்துக்கான சரியான நேரம் என திமுக தலைமை கணித்துள்ளது. ஏற்கெனவே, தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மண்டல வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றபோது, கடந்த முறையை விட வாக்குகள் குறையும் இடங்களில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. முன்னதாக, கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின், திமுக வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போதே, வாக்கு விவரங்களை முதல்வர் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இதுதவிர ஏஜென்ட்களால் கணிக்கப்பட்ட விவரமும் அவரிடம் தரப்பட்டிருந்தது. இதைக் கொண்டு நிர்வாகிகள் மீதான நடவடிக்கைக்கு முதல்வர் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்கட்டமாக, அமைச்சரவையில் மாற்றம் அடுத்த கட்டமாக கட்சியில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் என அடுத்தடுத்து அதிரடியை தர திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் கருதுகிறார். அதன் அடிப்படையில், கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றங்கள் இருக்கும். சீனியர்கள், சரியாக செயல்படாதவர்கள் மாற்றப்படலாம்.

அமைச்சர்கள் பெரும்பாலும் மாவட்ட செயலாளர்களாக இருக்கும் நிலையில், அவர்களின் செயல்பாடுகள் இந்த தேர்தல் முடிவில் தெரிந்துவிடும். அதன் அடிப்படையில் அமைச்சரவையை மாற்ற வாய்ப்புள்ளது.

தற்போது கட்சியில் நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ள நிலையில், கூடுதல் மாவட்டங்களை உருவாக்க ஏற்கெனவே பட்டியல் தயாராக உள்ளது. அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, கட்சியில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்யப்படும். குறிப்பாக, சட்டப்பேரவை தேர்தலுக்கான களப்பணியில் இளைஞர்கள் அதிகளவில் வேண்டும் என்பதால், இளைஞரணி நிர்வாகிகள் பலருக்கு புதிய பொறுப்புகள் தரப்படலாம்.

வரும் ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் திமுகவின் நிர்வாக கட்டமைப்புகளில் போதிய மாற்றங்களை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்