எப்போதும் மக்களின் குரலாக இருப்பேன் - விசிக விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: எப்போதும் மக்களின் குரலாக இருப்பேன் என்று விசிக விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா - 2024 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. வாழ்த்துரை வழங்கினார். முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமாவளவன் விருதாளர்களின் தகுதியுரையை வாசித்தார்.

7 பேருக்கு விருது: இதையடுத்து, நடப்பாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், 'மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு 'காமராசர் கதிர்', திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அருள் மொழிக்கு 'பெரியார் ஒளி, சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு 'அயோத்திதாசர் ஆதவன்', வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தருக்கு 'காயிதேமில்லத் பிறை', கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவுக்கு 'செம்மொழி ஞாயிறு' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார். விருதாளர் ராஜ்கவுதமன் உடல்நிலை காரணமாக வர இயலாததால் அவரது உறவினர் ஜெகநாதன் விருதை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் விருது பெற்றவர்கள் பேசியதாவது:

நடிகர் பிரகாஷ்ராஜ்: எந்த கட்சி மேடையிலும் என்னை பார்க்க முடியாது. ஏனென்றால் நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்த கட்சி மேடையிலும் நிற்க எனக்கு பிடிக்காது. ஆனால் நான் போராடுகின்ற அதே கொள்கைக்காக போராடும் விசிக கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் எனது தோழர்கள். அதற்காகவே இன்றைக்கு உங்கள் முன்பு நிற்கிறேன்.

இங்கே விருதுகள் வாங்கிய பலரைபோல அரசியலில் எனக்கு நீண்ட கால பயணம் கிடையாது. ஆனால் உடம்புக்கு ஒரு காயமானால், சும்மா இருந்தால் அந்த வலி போய்விடும். ஆனால் சமுதாயத்துக்கோ, நாட்டுக்கோ காயம் ஏற்பட்டால், அதற்கு நாம் பேசாமல் இருந்தால் வலி அதிகம் ஆகிவிடும். நான் ஒரு கலைஞன். மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றதால்தான் இன்றைக்கு மேடையில் நிற்கிறேன். மேடை ஏற்றிய மக்களுக்கும், சமுதாயத்துக்கும் ஒரு பிரச்சினை வரும்போது ஒரு கலைஞன் கோழையாகி விட்டால் சமுதாயமும் கோழையாகிவிடும். அந்த வகையில் நான் செய்து கொண்டிருப்பது என் கடமையை தான்.

யோசித்தாலே பயம் வருகிறது: கடந்த 10 ஆண்டுகளாக தான் இந்த மன்னரை (பிரதமர் மோடி) எதிர்த்து கொண்டிருக்கிறேன். இனிமேல் அவரை மன்னர் என்றும் கூற முடியாது. அவர்தான் தெய்வக் குழந்தை ஆகிவிட்டாரே. நாட்டுக்கு அவரால் எதாவது துன்பம் ஏற்பட்டால் அவரை திட்டவும் முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

மக்களின் பரிசத்தை உணராத ஒருவர், மனதை அறியாத ஒருவருக்கு மக்களின் பசி புரியாது. எனவே தன்னை தெய்வமகனாக சொல்லி கொள்பவர் தெய்வமகன் அல்ல. டெஸ்ட் டியூப் பேபி தான். மன்னரை பார்த்து பயப்படுபவன் நான் இல்லை. எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். நான் எப்போதும் மக்களின் குரலாக இருப்பேன்.

இரா.முத்தரசன்: விசிகவுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உறவு என்பது பிரிக்க முடியாதது. இந்த உறவு தொடரும். இது எனக்கு வழங்கப்பட்ட விருது அல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட விருது ஆகும். விவசாயத் தொழிலாளர்கள் தான் என்னை வளர்த்தார்கள். அவர்களே எனக்கு பேராசிரியர்கள் என்பதை சொல்வதில் பெருமை அடை கிறேன். தேர்தலின்போது 9 முறை பிரதமர் தமிழகம் வந்தார். ஒரு மன்னரை போன்ற நடவடிக்கை கொண்டவர் நமது பிரதமர். மாநிலத்துக்கு மாநிலம் வேஷம் போடுகிறார். தமிழகத்தை கடந்த பிறகு அவர் பேச்சு மாறு கிறது.

அருள்மொழி: நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மக்களிடம் எழுச்சி காணப்படுகிறது. நம்முடைய பணி இந்த தேர்தலுக்கானது மட்டுமல்ல நாட்டுக்கானது. அடுத்த ஆண்டு முதல் மீனாம்பாள் சிவராஜ், மூவலூர் ராமாமிர்தம் ஆகியோர் பெயரிலும் விசிக விருதுகள் வழங்க வேண்டும்.

எஸ்.என்.சிக்கந்தர்: இந்தியாவுக்கு வழிகாட்டக் கூடியவராக திருமாவளவன் திகழ்வார் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லப் போகின்றன. பாசிசத்தை எதிர்ப்பவர்களுக்கு தலைமை தாங்கும் தகுதி அவருக்கு உள்ளது.

எ.சுப்பராயலு: கோயில் கல்வெட்டுகள் சமூக வரலாற்றுக்கு எவ்வாறு உதவி செய்கிறது என்றே பார்க்கிறோம். இதனை பராமரிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின் மகள் பேராயர் கதிரொளி மாணிக்கம், சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜ்கவுதமனின் உறவினர் ஜெக நாதன் ஆகியோர் விழாவில் பேசி னர். இறுதியாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேருரை ஆற்றினார்.

விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ஆதவ் அர்ஜுன், தலைமை நிலையச் செயலாளர்கள் பால சிங்கம், தகடூர் தமிழ்ச் செல்வன், மாநில அமைப்புச் செயலாளர் லயன் ஆர்.பன்னீர்தாஸ், 190- வது வட்டச் செயலாளர் சிட்டு (எ) ஆமோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்